அமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத் தீயில், சுமார் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை அவர்கள் வெளியிட்டனர். காணாமல்போனவர்களில் பெரும்பாலோர் பரடைஸ் நகரைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற 70 வயதைக் கடந்தவர்கள். அங்கு காட்டுத் தீயால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க, தீயணைப்பாளர்கள் 7ஆவது நாளாகப் போராடி வருகின்றனர். காட்டுத் தீயில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே காட்டுத்தீயினால் சூறையாடப்பட்ட கலிபோர்னியா நகரை மீண்டும் முழுவதுமாக நிர்மாணிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்காவின் அவசரகால சேவை முகமையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். தான் பார்த்த பேரிடர்களிலேயே இதுதான் மிக மிக மோசமான பேரிடர் என்று மத்திய அவசர முகாமை நிறுவனத்தின நிர்வாக அதிகாரியான புரோக் லாங் இது குறித்து வர்ணித்துள்ளார்.