வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா


>
பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நேற்றிரவு சிறிலங்கா அமைச்சர்கள் நேற்றிரவு அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதில் நிமல் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜெயந்த, பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா, நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் மட்டுமே பிரதமரை (மகிந்த ராஜபக்ச) பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறியிருந்தார்.இந்தக் கருத்து, ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிய சிறிலங்கா அதிபரின் செயலுக்கு முரணானதாகும்.இதன் மூலம், அமைச்சர் பைசர் முஸ்தபா தமது வழிக்கு வந்திருப்பதாக ஐதேக தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க பதவிநீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்பதை, சிறிலங்கா அதிபரின் கட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது என்று ஐதேக தெரிவித்துள்ளது.