ரணிலை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் வகையில், பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா..?ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொள்வது தொடர்பில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.


நாடாளுமன்றில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,


எமக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதனை விடுத்து ரணிலுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதனை நிரூபிக்க முடிந்தால் ஓர் பிரேரணை கொண்டு வர வேண்டும்.


முடிந்தால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிக்குமாறு நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுக்கின்றேன்.


மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவரையும், சபாநாயகரையும், ரணிலையும் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பதற்கான அவசியம் என்ன?


கடந்த காலங்களில் இந்த ராஜதந்திரிகள் எங்கிருந்தார்கள்? புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சமஸ்டி அரசாங்கமொன்றை உருவாக்குவதே மேற்குலக நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது.


சபாநாயகரினால் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் நாடாளுமன்றில் ஏற்படுகின்றது. நான் எந்த சந்தர்ப்பத்திலும் மிளகாய்தூள் கொண்டுவரவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.