பசில் விடாப்பிடி – கண்டியிலேயே தங்கிவிட்ட மைத்திரி - முரண்பாடுகள் நீடிக்கிறது


நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிடித்து வருவதால், மைத்திரி- மகிந்த கூட்டணி இடையே முரண்பாடுகள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது ஆலோசகர்கள் மற்றும் தமது கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதன்போது ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைத்துப் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

எனினும், இன்னமும் மாற்றுக்கருத்துக்கள் நீடித்து வருகின்றன. தாமரை மொட்டு சின்னத்தில் தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ச விரும்புகிறார்.அதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,சின்னம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கண்டியிலேயே தங்கியிருந்தார் இன்று அவர் கொழும்பு திரும்பியதும், இரண்டு தரப்புகளுடனும் அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.