பல்கலைக்கழக மாணவர் மத்தியில் உருவாகியுள்ள மனப்பக்குவம்

பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் குழப்பக்காரர்கள், எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் வகுப்பு பகிஷ்கரிப்பு என்றெல்லாம் செய்பவர்கள், பொது சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்பவர்கள், தம் செயற்பாடுகளால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து கவனம் செலுத்தாதவர்கள், தம் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உரிய ஒழுங்கில் கொண்டு செல்ல தெரியாதவர்கள்.

இவ்வாறான பார்வையும் அபிப்பிராயமும் நாட்டு மக்கள் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் காணப்படுகின்றன. இந்தப் பார்வையும் அபிப்பிராயமும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சாதகமானவை அல்ல.

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் இவ்விதமான பார்வை மக்கள் மத்தியில் நிலவுவதற்கு அவர்களது அண்மைக்கால செயற்பாடுகள்தான் காரணமாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான பார்வை மக்கள் மத்தியில் ஏற்படுவதை தவிர்ப்பதற்கோ அல்லது தம்மைப் பற்றி மக்கள் மத்தியில் சாதகமான நி​ைலமையை கட்டியெழுப்புவதற்கோ இந்த மாணவர்கள் கவனம் செலுத்துவதுமில்லை. மாறாக தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் சரி என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தலைநகரில் பல்கலைக்கழக மணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் காரணமாக போக்குவரத்து பயணிகள் அனுபவிக்கின்ற அசௌகரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். இதன் விளைவாகவே பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் இவ்வாறான பார்வையும் அபிப்பிராயமும் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற்று காணப்படுகின்றது.

ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் என்பவர்கள் நாட்டினதும் மக்களினதும் சுபீட்சத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை நல்கவேண்டியவர்கள். இருந்தும் அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதாக இல்லையென்ற அபிப்பிராயம் கூட மக்கள் மத்தியில் நிலவவே செய்கின்றது.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு முன்மாதிரியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்த அழகியற் கலை நிறுவன மாணவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் தான் இந்த முன்மாதிரி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதாவது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது. அக்கோரிக்கைக்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் அந்த மக்கள் சுமார் 200 வருடங்களாக இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்போடு உழைத்து வருபவர்கள். அவர்களது கோரிக்கை நியாயபூர்வமாக அணுகப்பட்டு சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்று இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர்.





பல்கலைக்கழக மாணவர்கள் அண்மைக்காலத்தில் நடத்திய ஆக்கபூர்வமாக ஆர்ப்பாட்டங்களில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதோடு மக்கள் மத்தியிலும் வரவேற்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. இம்மாணவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

இதேவேளை இத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக கொழும்பு காலி முகத்திடலிலும் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது தெரிந்ததே.

என்றாலும் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானது. அதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கப்பெற்றிருப்பதும் இவர்களது அண்மைக்கால நடவடிக்கைகளை மறுசீரமைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பியது போன்று சமூகத்தில் தீர்வு காணப்படாது நீடித்து வரும் பல்வேறு பிரச்சினைகளது தீர்வுக்காகவும் குரலெழுப்ப முடியும். அவ்வாறு குரலெழுப்பப்படுவதை மக்களும் வரவேற்கக்கூடியவர்களாக உள்ளனர்.

அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் மத்தியில் நல்லபிமானத்தை கட்டியெழுப்பும் வகையில் தமது நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வாறு அமைத்துக்கொள்ளும்போது பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டினதும் சமுகத்தினதும் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பங்களித்தவர்களாக அமைவர்.