எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு

சரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில் எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்களாக குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சவூதி எரிசக்தி அமைச்சர் காலித் அல் பாலிஹ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இந்த அறிவிப்பை அடுத்து நேற்று உலக சந்தையில் எண்ணெய் விலை ஒரு வீதத்தால் ஏற்றம் கண்டுள்ளது.உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி கடந்த ஒக்டோபர் தொடக்கம் நாளொன்றுக்கு 10.7 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்வதாக பாலிஹ் குறிப்பிட்டார்.

எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் அமைப்பில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையிலேயே சவூதி இந்த முடிவை எடுத்துள்ளது. ஒபெக் மற்றும் ரஷ்யா தலைமையிலான 10 எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கடந்த ஜுன் மாதத்தில் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் அதிகரிப்பதற்கு கடந்த ஜுன் மாதத்தில் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் வரை ஒரு பீப்பாய் 85 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை, கடந்த வெள்ளிக்கிழமை பீப்பாய் 70 டொலர்களாக குறைந்தது.

ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அங்கிருந்து சில நாடுகள் மட்டும் மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரான் தடையை கருத்தில் கொண்டு அமெரிக்கா மசகு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தியுள்ளது.

இதுபோல் சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இது மசகு எண்ணெய் விலை சரிவுக்கு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் உற்பத்தியை குறைப்பது பற்றி வியன்னாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒபெக் மற்றும் ஒபெக் அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.