போதைப் பொருளுக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வும் பயிற்சியும்




போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து 'எப்படி இருக்கிறது' என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை ஆரம்பிக்கிறார்.

ஒருமுறை இருமுறையாகி பலமுறை ஆகும்போதுதான் அந்த பழக்கத்தைக் கைவிட முடியாத அளவுக்கு அது போயிருக்கிறது என்பது அவருக்குத் தெரிகிறது. அதாவது அந்தப் பழக்கத்தை அவரது மூளை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே இது குறிக்கிறது. போதைப் பழக்கம் மெல்ல மெல்ல ஏனைய சமூகவிரோத பழக்கங்களுக்கும் வழிவகுக்கிறது. இறுதியில் சிறையில் கம்பி எண்ண வேண்டிய நிலைக்கும் அவர்களை இட்டுச் செல்கிறது.

போதைவஸ்து பழக்கத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். இது நல்ல நிலைமை அல்ல. அவர்களை சமூகம் ஒதுக்கித் தள்ளக் கூடாது. அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து விடுவிப்பதே சரியானது.

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவராக இருந்த லெய்ஷா டி சில்வா இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் முகாம் ஒன்று கண்டக்காடு என்ற இடத்தில் இருந்தது.

இப்போது முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அங்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. அதனால் அந்த நிலையம் வெறுமையாகத்தான் இருந்தது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டளவில் அந்த முகாம் போதைவஸ்து பழக்கத்தைக் கொண்டவர்களை புனர்வாழ்வளிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்கூறிய முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் சேர்ந்து கொண்டதையடுத்து புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்ட முகாமை போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

அதேநேரம் நாட்டின் வேறு பல இடங்களிலும் இதுபோன்ற போதை புனரமைப்பு முகாம்கள் இருப்பதாகவும் அவற்றில் போதைவஸ்து பழக்கத்தை கைவிடுவதற்கான சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அவ்வாறான நிலையங்களில் புனர்வாழ்வு செயற்பாடுகள் இடம்பெறும் போதே அங்கு உள்ளவர்கள் போதைவஸ்து பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கண்டக்காடு முகாமில் இராணுவ ஒழுக்கம் பின்பற்றப்படும். அத்துடன் புனர்வாழ்வு செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு உள்ளவர்கள் போதைவஸ்து பாவனையில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அத்துடன் அங்குள்ள உத்தியோகத்தர்களும் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் முகாமுக்குள் சிகரெட் பிடிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது.

முகாமுக்குள் இராணுவ ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும், அங்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் அன்பாகவும், மதிக்கப்படும் வகையிலும் நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் மீதான புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்திப்படும் வகையில் இருக்குமா என்று கேட்டால், 'ஆம்' என்றுதான் கண்டக்காடு முகாமில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அது இலகுவானது அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதனை ஒரேயடியாக விட்டுவிட மாட்டார்கள். படிப்படியாகத்தான் அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். ஒரு சிலரால் குறுகிய காலத்தில் அப்பழக்கத்தை கைவிட முடிந்தாலும் மற்றும் சிலருக்கு அதனை கைவிட நீண்ட காலம் எடுக்கும். ஒரு சிலர் இரண்டு மூன்று தடவை தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இங்கு வழக்கப்படும் சிகிச்சையின் நோக்கம் சிகிச்சை பெறுபவர்கள் போதைவஸ்து பாவனையை நிறுத்த வேண்டும். அத்துடன் தமது குடும்பம், வேலை மற்றும் சமூகத்தில் தன்னுடைய நிலை சிறப்பாக இருக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதாகும்.





நீதிமன்றங்களின் உத்தரவுகளின் பேரிலேயே இவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள கண்டக்காடு முகாமுக்கு கொண்டுவரப்படுகின்றனர். இதற்கு முன்னர் நீதிமன்றங்களின் முன்பாக கொண்டுவரப்படும் போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையானோர் சிறைச்சாலைகளுக்கே கொண்டு செல்லப்பட்டனர்.

கண்டக்காடு முகாமில் தற்போது போதைவஸ்துக்கு உள்ளான 1066 பேர் புனருத்தாரணம் பெற்று வருகின்றனர். முதலில் ஆறு மாத காலத்துக்கு இவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்ப சிகிச்சையின்போது ஆன்மிகப் பயிற்சி, அறிவுரை, தியானம் ஆகியவை இடம்பெறுகின்றன. அதனையடுத்து அவர்கள் சேனபுர முகாமுக்கு இரண்டாம் கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளையும் சமூகத்துடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இந்த இரு முகாம்களிலும் இட நெருக்கடி நிலவுகிறது. இதனைத் தீர்க்கும் முகமாக இங்கு மேலும் பல நிரந்தரக் கட்டடங்களை அமைக்கவும் ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டக்காடு முகாமில் இராணுவ ஒழுக்கமுறை பின்பற்றப்படுவதால் காலை 6 மணிக்கு நித்திரையை விட்டு எழும்ப வேண்டும். எழுந்தவுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் 7 மணி வரை தேசாப்பியாசம் இடம்பெறுகிறது. அதன் பின் தமது சுற்றுப்புறத்தை சுத்தமாக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. அதனையடுத்து காலை உணவு பரிமாறப்படுகிறது.

அதன் பின்னர் 9 மணி முதல் 11 மணி வரை சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. இடையில் தேநீர் இடைவேளை வழக்கப்படுகிறது. அதன் பின் 11 மணி முதல் 12.30 வரை தலைமைத்துவ, திறன் அபிவிருத்திப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன. 12.30 முதல் 2.30 வரை பகல் உணவு அதன் பின் 4 மணி வரை இசை மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகள் 4 மணி முதல் 6 மணி வரை கரப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், பெட்மின்டன் மற்றும் ஜிம் உடற்பயிற்சி நடைபெறும்.7 மணிக்கு இரவு உணவு. அதன் பின் 10 மணி வரை தொலைக்காட்சி என்பது படம் பார்த்தல், 10 மணிக்கு நித்திரைக்குச் செல்லுதல் என்பதே இங்கு இடம்பெறும் நாளாந்த அட்டவணை ஆகும்.

இங்கு சுமார் 70 உத்தியோகத்தர்கள் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் தேசிய கடெட் படையைச் சேர்ந்தவர்கள். அனைவரும் ஆசிரியர்களாக இருப்பவர்கள். இராணுவப் பயிற்சி பெற்றுள்ள இவர்கள் சிவில் உடைகளிலேயே பணிபுரிகின்றனர். அத்துடன் பல்வேறு துறைகளில் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர்கள் தியானம் மற்றும் அறிவுரை ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றவர்கள். இங்கு சிகிச்சை பெறுவோருக்கான உடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவர்களது சுகாதார வசதிகளும் துவாய், சோப், போன்றவையும் இலவசமாகவே வழக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சையின் முதல் 3 மாதங்களின் போது அவர்களைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி இல்லை. அதன் பின்னர் குடும்ப அங்கத்தவர்கள் மாதம் இருமுறை அவர்களைப் பார்வையிடலாம்.

இங்கு சிகிச்கைக்கு வருபவர்கள் ஆரம்பம் முதலே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதேநேரம் ஆரம்ப சிகிச்சையின் போது அவர்களுக்கு வழங்கப்படும் 10 நாள் தியான நிகழ்ச்சி முக்கியமானது. குறிப்பிட்ட 10 நாட்களும் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அவர்கள் ஒரு பௌத்த பிக்குவின் கீழ் இந்தப் பயிற்சியை பெறுகின்றனர். இந்த மன அமைதி சிகிச்சையின்போது அவர்கள் எவருடனும் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு சிசிச்சைக்கு வருவோர் தாம் பின்பற்றும் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ளன.

இங்கு சிகிச்சை பெறுவோர் கைத்தொலைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது அத்துடன் வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன