ஐ.அ. இராச்சியத்தில் பிரிட்டன் மாணவனுக்கு ஆயுள் தண்டனை


வெளி ஆட்களுக்கு உளவு பார்த்ததாகவும், இரகசிய பாதுகாப்பு தகவல்களை கொடுத்ததாகவும் பிரிட்டன் நாட்டு மாணவரான மத்தியூ ஹெட்ஜெஸுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அபூதாபியின் மத்திய நீதிமன்றம் கடந்த புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கடும் அதிப்தியை வெளியிட்டுள்ளார்.


“அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எம்மால் உறுதி செய்ய முடிகிறது. அவரது வழக்கறிஞரும் இல்லாமல் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேர விசாரணைக்கு பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்று ஹெட்ஜஸின் குடும்பம் சார்பில் பேசவல்ல ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். டர்ஹாம் பல்கலைக்கழத்தின் முனைவர் பட்ட மாணவரான 31 வயது ஹெட்ஜெஸ் கடந்த மே 5 ஆம் திகதி டுபாய் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2011 அரபு வசந்தத்திற்கு பின் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பிலேயே ஹெட்ஜெஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.