காங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, விஜயசாந்தி பிரசாரம்
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில் விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்திகதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது.

இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.