ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு

மதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்க நேரம் கோரப்பட்டதையடுத்து குறித்த சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம் பெற்றதாக உலமா சபை தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகளுக்கும் தனது தலைமையிலான அரசிலேயே தீர்வு காணப்பட்டது. மூதூரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட கிழக்கில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை, வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீளக் குடியேற்ற பிரச்சினை என்பவற்றை தானே தீர்த்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) மாளிகாவத்தையில் உள்ள ஜம்மியத்துல் உலமா செயலகத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பு ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேக் எம்.ஏ.எம் முபாறக் , தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பைசர் முஸ்தபா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய சுதந்திர முன்னணி அமைப்பாளர் மொஹமட் முசம்மில் மற்றும் பொதுஜன பெரமுன முஸ்லிம் தலைவர்கள் உட்பட பல உலாமாக்களும் இதில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பினை அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தார் இங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

நாட்டின் முன்னேற்றத்திற்கு சகலதரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நான் ஆட்சியில் இருந்த போது இன, மத பேதமின்றி எனது செயற்பாடுகளை மேற்கொண்டேன். இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்காமல் இருக்க என்னாலான செயற்பாடுகளை முன்னெடுத்தேன்.

அளுத்கம சம்பவத்தின்போது நானும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளாரும் நாட்டில் இருக்கவில்லை. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுத்தேன். முஸ்லிம்களுக்கு இனி ஒருபோதும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் இன ரீதியாக கட்சிகள் சகல இனங்களிலும் காணப்படுகின்றன. அவர்களே அவ்வப் போது இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறார்கள். தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது இவ்வாறான இன,மத.ரீதியான பிரிவுகள் இன்றி நாம் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட முடியும் என தெரிவித்த பிரதமர் நாம் இனவாதத்துடன் ஒருபோதும் செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் இங்கு குறிப்பிட்டதாவது, பலவருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல அபிவிருத்திகளை நாட்டிற்கு செய்துள்ளீர்கள். இன்றைய நாட்களில் நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலை ஒன்றுநிலவி வருகின்றது. இந்தநிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம், சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். இந்நிலைமையை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளமுடியுமெனவும் இதனால் நாட்டுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்கமுடிவதோடு நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் நிலைநிறுத்த முடியுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகிறது எனஅவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முப்பது வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிய தலைவர் என்ற வகையில் நீங்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகமும், சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சிப்பீர்கள் எனவும் நாட்டுமக்களிடையே இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையர் என்ற ஒரே குடையில் தொடர்ந்தும் பயணிப்பதினூடாக எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாறுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இன ரீதியாக சிலர் செயற்பட்டார்கள். கண்டி ,திகன, அளுத்கம, அம்பாறை பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

உலமா சபை உப தலைவர் தாஸிம் மௌலவி கூறுகையில், அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவுதி அரசாங்கம் 500 வீடுகள் நிர்மாணித்தது. அவ் வீடுகள் இன்றும் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா இவ் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரச்சினைகளை பிரதமா் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். இவ் வீடுகளை அரசியல்வாதிகள் பகிர்ந்தளிப்பதால் ஏற்பட்ட பிரச்சினைககளாலே கையளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நாட்டினை இன ரீதியாக பிரித்தால் கொழும்பையும் வெள்ளவத்தையும் துண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டி ஏற்படும். ஒரு இறைமையுள்ள நாட்டினுள் சகல சமூகங்களும் ஒன்றாக இணைந்து வாழும் முறையே சகலருக்கும் சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.