வரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு
விஷாலுடன் காதலுமில்லை திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார்.

“போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார்.அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

’நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.

இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’ இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்