Breaking

Monday, November 19, 2018

ஏழைகளை இழிவுபடுத்தும் கமல்!
"பிச்சைக்காரர்களுக்குத்தான், இலவசம் தேவை" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை தீயிட்டு எரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு அ.தி.மு.க கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அந்தக் காட்சியை மறுதணிக்கை செய்து நீக்கி விட்டனர் படக்குழுவினர்.

இருப்பினும் தற்போது சமூகவலைத்தளங்களில், வீட்டிலுள்ள இலவசப் பொருட்களை தீயில் தூக்கிப் போட்டு எரிப்பது, உடைப்பது போன்றவற்றை வீடியோவாக எடுத்து அதைப் பரப்பி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் என்பது அவசியமா, அநாவசியமா பட்டிமன்றத்திற்கு இந்தத் திரைப்படம் வழிகோலியுள்ளது.

இதனிடையே வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கமல்ஹாசன், "பிச்சைக்காரர்களுக்குத்தான் இலவசம் தேவை" என்று பதில் தெரிவித்துள்ளார்.

அரசின் இலவச திட்டங்களால் பயனடைந்தோரை, இழிவுபடுத்துவதைப் போல கமல்ஹாசன் பேச்சு உள்ளது என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.கமல்ஹாசனின் பேச்சு என்பது மேல்தட்டு மனோபாவம் அல்லது முதலாளிகளின் குரல் என்கிறார்கள் சமூகநலத் திட்டங்களுக்கு ஆதரவானவர்கள்.

கமல்ஹாசன் தெரிந்துதான் பேசினாரா அல்லது அறியாமல் பேசி விட்டாரா என்பது புரியவில்லை என்கிறார்கள் அவர்கள்.

வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் ஓரளவுக்கு வசதியானவர்களின் வீட்டு வாசலில் சென்று நின்று தொலைக்காட்சி பார்த்த காலம் இருந்தது. தங்கள் வீட்டில் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட போது கடவுளே வானத்திலிருந்து வரம் கொடுத்ததை போல உணர்ந்திருப்பார்கள் அவர்கள்.தொலைக்காட்சியில் நல்ல காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு,'நாங்கள் சாப்பிடப் போகிறோம், வெளியே போங்கள்' என்று வீட்டு உரிமையாளர் சொல்லும்போது இயலாமையின் வலியை சுமந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் இளம்தலைமுறையை இப்போது பார்க்க முடிகிறதா? இந்த இலவசமானது நவீனகால தொலைக்காட்சி தீண்டாமையை ஒழித்து விட்டதே... இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?" என்று கமலுக்கு எதிராக கருத்துகள் பரவுகின்றன.

"ஓரளவு வசதியான குடும்பத்தினருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையிலிருந்த, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை ஒடுக்கப்பட்டவர்கள் வீட்டிலும், ஏழைஎளியவர்கள் வீட்டிலும் இருக்கும் போது அங்கு சமூக சமத்துவம் நிலை நாட்டப்பட்டு விட்டதே!இதை நீங்கள் கவனிக்கவில்லையா கமல்? இலவச மடிக்கணனி மூலமாக தமிழக மாணவர்கள் சமூகத்தில் கணினி நீக்கமற கலந்து விட்டது. பிற மாநில மாணவர்கள் இதை வியப்போடு உற்று நோக்குவது உங்களுக்குத் தெரியுமா? நாளைய, தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகத்தில் போட்டி போடுவதற்கான பயிற்சியாயிற்றே இந்த இலவசம். பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தொலைத்தொடர்புத் துறையில் இனி, நமது மாணவர்கள் தான் முன்னால் ஓடிக் கொண்டிருப்பார்கள். இது எதிர்காலத்திற்கான முதலீடு இல்லையா?

இந்தியாவிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள், கொண்டது தமிழகம். இங்கு வழங்கப்படும் இலவச சிகிச்சையால், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு அவர்களின் உழைப்புத் திறன் தக்க வைக்கப்படுகிறதே!பொருளாதார வளர்ச்சிக்கு அது முதலீடு கிடையாதா? இலவசம் என்பற்காக, அரசு மருத்துவமனைகளை மூடிவிட்டு பணம் கறக்கும் மருத்துவமனைகளை மட்டும் செயற்பட செய்ய வேண்டுமா? இதைத்தான் கமல்ஹாசனும் விரும்புகிறாரா?" என்றெல்லாம் சமூகவலைத்தளத்தில் கண்டனங்கள் பெருகுகின்றன.

இங்கிலாந்தில் இலவச சிகிச்சை அளித்தால் அது வளர்ச்சி.இந்தியாவில் கொடுக்கப்பட்டால் அது பிச்சைக்காரத்தனம் என்பதா? ரேஷன் மானியம், உர மானியம் என அனைத்தையும் ஒழித்துவிட்டு, பன்னாட்டு முதலாளிகள் பிடிக்குள் ஏழைகளைக் கொண்டு சென்று நசுக்கும் கொள்கை கொண்ட வலதுசாரி கட்சி தலைவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏழைகளின் காவலனாக காட்டிக்கொண்ட உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லையே கமல் சார்" என்கிறார்கள் மக்கள்.