Breaking

Thursday, April 11, 2019

மனித வரலாற்றில் பலநூறு வருட ஆராய்ச்சியின் பின் விஞ்ஞானிகளின் அசத்தல்!

யனை விடவும் 6.5 பில்லியன் மடங்கு பெரிதான கருந்துளை எனப்படும் “Black Hole” புகைப்படத்தை முதன் முதலாக விஞ்ஞானிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

மனித வரலாற்றிலேயே முதன் முறையாக கருந்துளை ஒன்றை நேரடியாக EHT  படம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலதிக விபரம்!
————————
இந்தப் பிரஞ்சத்தில் இருக்கும் அதிசய வான்பொருட்களில், கருந்துளைகளுக்குத்தான் முதலிடம். அவற்றின் ஈர்ப்பு விசை மிக அதிகம்; அவற்றின் விளிம்பைத் தொட்டுவிட்டால், ஒளி உட்பட அனைத்துப் பொருட்களும் உள்வாங்கப்படும், இப்படியெல்லாம் கேள்விப்படுகிறோம்.

ஒளி உள்வாங்கப்பட்டுவிடும் ஓர் அமைப்பு, இருட்டாக இருக்கும். இதனால் கருந்துளைகளைப் படம்பிடிப்பது என்பது இயலாத காரியம். ஆனால், இருளடைந்த கருந்துளையின் கடைசி விளிம்பில், ஒளி பாயும் அல்லவா? கிட்டத்தட்ட முழுகிரகணத்தின் விளிம்புபோல அது தெரியும்; அதைப் படம்பிடிக்கலாம் இல்லையா?

கருந்துளையில் ஒளி பாயக்கூடிய அந்தக் கடைசி எல்லைக்கு Event horizon (இவென்ட் ஹொரைசன்) என்று பெயர். அதைப் படம் எடுத்தால், அதுதான் கருந்துளையின் படமாகவும் இருக்கும். ஆனால், இதுவரை அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை. இதுவரை நாம் பார்த்த கருந்துளைப் படங்கள் எல்லாமே, வரையப்பட்ட சித்திரிப்புக் காட்சிகள்தான்.

இந்தக் கருந்துளையைப் படம்பிடிப்பது என்பது, நிலவில் இருக்கும் ஒரு திராட்சையை, பூமியிலிருந்து படம் பிடிப்பதற்குச் சமம். என்றாலும், இதைச் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தொலைதூரத்தில் சிறியதாகத் தெரியும் ஒரு பொருளைப் படம்பிடிக்க, தொலைநோக்கியின் அளவு பெரிதாக இருக்க வேண்டும். நமது பால்வீதி மண்டலத்தின் கருந்துளையைப் படம்பிடிக்க, பூமி அளவு பெரிய தொலைநோக்கி வேண்டும். 

பூமி அளவுக்கு பெரிய்ய்ய்ய தொலைநோக்கியை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. ஒருவேளை, எப்படியோ கஷ்டப்பட்டு அவ்வளவு பெரிய தொலைநோக்கியை செய்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். அதை விண்வெளியில் எங்கே நிறுவுவது? அது சுற்றி வருவதற்கான பாதையை, விண்வெளியில் எப்படி உருவாக்க முடியும்? பிற வான்பொருட்களை நகர்த்த வேண்டுமே! ம்ஹூம். பூமி அளவுக்கு, ஒற்றைப் பெரிய டிஷ் ஆண்டனா தொலைநோக்கியைச் செய்வது நிச்சயம் முடியாத காரியம்தான்.

ஆனால், பூமியில் ஆங்காங்கே இருக்கும் தொலைநோக்கிகளை இணைத்து, பூமி அளவிலான ஒரு தொலைநோக்கி எப்படிப் படம் எடுக்குமோ, அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

பசிபிக் பிரதேசத்தில் ஹவாய் தீவு, தென் அமெரிக்க கண்டத்தில் சிலி, வட அமெரிக்க கண்டத்தில் மெக்சிகோ, கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்சிகோ, வட துருவத்தில் கிரீன்லாந்து, ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பெயின், தென் துருவத்தில் அண்டார்டிகா ஆகிய இடங்களில், மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கிகள் இருக்கின்றன.

1) இந்தத் தொலைநோக்கிகள் அனைத்தும், ஒரே நேரத்தில், சஜிடேரியஸ் கருந்துளையைப் படம் பிடிக்கும்.

(Electro-magnetic spectrum எனப்படும் மின்காந்த அலைமாலையில், காமா, எக்ஸ் ரே, புற ஊதா கதிர்களுக்கு அடுத்து, கண்ணால் காணக்கூடிய ஒளி (Visible Light) அமைந்திருக்கும். அடுத்து, மைக்ரோ கதிர்களும், ரேடியோ கதிர்களும் அமைந்திருக்கும். உண்மையில் இந்தத் தொலைநோக்கிகள், பொருட்கள் வெளியிடும் ஒளியை உள்வாங்கி, காட்சியை நமக்கு வழங்கும் ஆப்டிக்கல் தொலைநோக்கிகள் அல்ல. வான்பொருட்கள் வெளியிடும் ரேடியோ அலைகளை உள்வாங்கி, தகவல்களைப் பதிவுசெய்யும் ரேடியோ தொலைநோக்கிகள். அந்தத் தகவல்களைக் கொண்டு அந்த வான்பொருட்களின் படத்தை உருவாக்க முடியும். நம் புரிதலுக்கு இந்தத் தொலைநோக்கிகள் படம் பிடிக்கும் என்று சொல்லலாம்)

2 கருந்துளை மிகப் பெரியது   என்பதால், குறிப்பிட்ட ஒரு நேரத்தில், ஒவ்வொரு தொலைநோக்கியும் ஏதாவது ஒரு சிறிய பகுதியைத்தான் படம் எடுக்கும். கருந்துளையை ஒரு பெரிய யானையாகக் கற்பனை செய்துகொண்டால், அதன் ஒரு கண்ணை ஒரு தொலைநோக்கியும், வாலின் நுனியை ஒரு தொலைநோக்கியும், கால் நகத்தை ஒரு தொலைநோக்கியும் உற்று நோக்கிைப் பதிவு செய்வது போல, கருந்துளையை துண்டுதுண்டாக இந்தத் தொலைநோக்கிகள் பதிவு செய்யும்.

3 பூமி சுற்றும்போது, பூமியின்  மேற்பரப்பில் இருக்கும் தொலைநோக்கிகளும் சேர்ந்தே சுற்றும். விண்ணில் இருந்து பார்க்கும்போது, இந்த எட்டுத் தொலைநோக்கிகள் அமைந்துள்ள இடம் மாறிக்கொண்டே இருக்கும். ஆக, தொலைநோக்கிகள் உற்றுநோக்கக்கூடிய குவி மையமும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால், இந்தத் தொலைநோக்கிகளால் கருந்துளையின் வெவ்வேறு பகுதிகளைத் துண்டு துண்டாகப் படம் பிடிக்க முடியும்.

 'ஜிக்சா பசில்' விளையாட்டில், துண்டுகளைச் சேர்த்து ஒரு முழுப் படத்தை உருவாக்குவோம் அல்லவா? அதுபோல, இந்த 8 தொலைநோக்கிகளும் தொடர்ச்சியாக 10 நாட்கள் எடுத்த துண்டுப் படங்களைச் சேர்த்தால், முழு கருந்துளையின் படத்தையும் உருவாக்கிவிடலாம்.

இந்தத் தொலைநோக்கி அமைப்புக்கு, Event horizon telescope (இவென்ட் ஹொரைஸன் டெலஸ்கோப்) என்று பெயர்.

கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை, இந்தத் தொலைநோக்கிகள் படம் எடுத்தன. தென் துருவ தொலைநோக்கி படம் எடுப்பதில், சில சிக்கல்கள் எழுந்தது. என்றாலும், 2018 ஆம் ஆண்டில் முழுப் படத்தையும் உருவாக்கும் பணி நிறைவடைந்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.