Breaking

Thursday, April 11, 2019

மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி




உலகெங்கும் மரண தண்டனை நிறைவேற்றம் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலத்தில் மிகக் குறைவாக, 2018 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தவிர்த்து கடந்த ஆண்டில் 20 நாடுகளில் சுமார் 690 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். இது 2017 ஆம் ஆண்டு மரண தண்டனைக்கு உள்ளான 993 பேரை விடவும் 31 வீத வீழ்ச்சியாகும்.

சில போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கான மரண தண்டனையை கைவிட்டதை அடுத்து ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது 50 வீதம் குறைந்திருப்பது மன்னிப்புச் சபையால் கண்டறியப்பட்டுள்ளது.





சீனாவில் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கலாம் என்றபோதும் அது பற்றிய பதிவு ரகசியமாக உள்ளது என்று மன்னிப்புச் சபை கூறியது.

அந்தப் பதிவு வெளிவந்தால் உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடாக சீனா இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இது தவிர ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம் மற்றும் ஈராக் நாடுகள் உலகில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் முன்னிலையில் உள்ளன. 690 மரண தண்டனைகளில் 77 வீதமானவை இந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளன.