Breaking

Sunday, April 7, 2019

அகோர வெயில் சுட்டெரிக்கும் வறட்சி




. இன்று எல்லோரும் உஷ்ணத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள்வெயிலின் அகோரம் தாங்க முடியாதிருக்கிறது . சூரியன் உச்சத்தில் நின்று கொளுத்துகிறது. பகலில் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் சரி இந்த கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது. சிறிது நேரம் வெளியில் நடந்தால் கூட வியர்த்துக் கொட்டுகிறது.

அதுவும் மின்வெட்டு அமுல் செய்யப்படும் வேளைகளில் வீட்டில் இருப்பது அவஸ்தையாகி விடுகிறது.

வீட்டில் இருந்து அலுவலகத்திற்கோ அல்லது எங்காவதோ செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அணிந்திருக்கும் உடை வியர்வையில் நனைந்து விடுகிறது. இந்த வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் சில சமயங்களில் அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்க வைத்து விடுவதுமுண்டு.

வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தடுப்பதாயின் தினமும் குறைந்தது இரு தடவையாவது குளிப்பது அவசியம். உடலில் அதிகமாக வியர்க்கிறது என்றால் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல் உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.

ஆடை அணிவதற்கு முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துடைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் உடலில் ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையும்.காரணம் பக்டீரியாக்களின் தொழிற்பாடு ஆகும்.

தலைமுடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாகப் பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் அவற்றினால் ஏற்படும் வியர்வை சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் இந்த வெப்பநிலையில் பக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியவை.





பக்டீரியாவுக்கு எதிரான சவர்க்காரங்களை பயன்படுத்துவது சிறந்தது. அவை சருமத்தில் உள்ள பக்டீரியாக்களை போக்குவதுடன் துர்நாற்றத்தில் இருந்து பாதுகாக்கும்.

பருத்தித் துணி அணிவதற்கு சிறந்தது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடைகள் வியர்வையை தேக்கி வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. ஆகவே அவ்வாறான உடைகளை தவிர்த்து விடுவது நலம். இறுக்கமான ஆடைகளை அணியாமல், விசாலமான பருத்தி ஆடைகளை அணிவதுதான் சிறந்தது. மேலும் சப்பாத்து அணியும் போது பருத்தி காலுறைகளைப் பயன்படுத்தினால் இந்தக் கோடை காலத்தில் வியர்வைத் துர்நாற்றத்தில் இருந்து சிறிது விலகி இருக்க முடியும்.

இன்றைய கோடை காலத்தில், இவ்வாறு சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் வியர்வையால் ஏற்படும் அவஸ்தையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். வெயில் காலங்களின் போது நமது உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கடுமையான வெயில் காரணமாக உடலின் நீர்ச்சத்து குறைந்து பல உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. அதனால் கடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தயிரில் நன்மை தரும் பக்டீரியாக்கள் உள்ளன. அதனால் வெயில் காலத்தின் போது தயிர் உண்ண வேண்டும். மோர் பருகலாம். சமிபாட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

கோடை காலத்தில் வெயில், தாகம், வியர்வை, நீரிழப்பு, தொற்றுநோய்கள் என ஒன்றன் பின்னால் ஒன்று வந்து கொண்டுதான் இருக்கும். வெயிலின் அகோரம் தணிக்கவென நாம் வாங்கி அருந்துகின்ற குளிர்பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை பொருத்தமானவை அல்ல.