ஸஹ்ரான் மௌலவிகள், எவ்வாறு உருவாகிறார்கள்


- முகம்மது உமர் -
கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை நாம் மிகத் தெளிவாக உணர வேண்டிய தருணமிது. இது ஒரு பூகோளமயமான உலகம். இங்கே உலகின் ஒரு மூளையில் இடம்பெறும் நிகழ்வு அல்லது மாற்றம் உலகின் அடுத்த மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். 2001 இல் இடம்பெற்ற இரண்டைக்கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குறிப்பாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குறி வைத்து அமெரிக்க மற்றும் அதன் கூட்டு சக்திகளால் பிரகடனப்படுத்தப்பட்ட போரின் பின்னர், உலகம் ஒரு புதிய யுகத்திற்குள் பிரவேசித்தது. இது சர்வதேச அரசியலையும், உறவுகளையும் வெகுவாகப் பாதித்தது. வேறுபட்ட சிந்தனைகளுக்கும், சமூகங்களுக்கும் மத்தியில் நிரந்தரமான பதட்ட நிலையை தோற்றுவித்தது. இந்தப்பாரிய மாற்றத்தின் தாக்கத்திலிருந்து இலங்கையும் தப்பிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் பிரசன்னம் ஆரம்பத்தில் அதன் வீரியத்தை குறைத்து வைத்திருந்தாலும் 2009 இல் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அதன் தாக்கத்தை முஸ்லிம்கள் இலங்கையிலும் உணர ஆரம்பித்தார்கள். இன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதல் நடவடிக்கையும், அதனைத்தொடர்ந்த வன்முறைகளும் மேற்சொன்ன தாக்கத்தின் ஒரு விளைவேயாகும்.


தாக்குதல்கள்


1) அதியுயர் சக்தி வாய்ந்த சீ4 ரக வெடிமருந்து பாவிக்கப்பட்டு, மிகவும் நுணுக்கமாக திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பலரின் பங்கேற்புடன் நிகழ்த்தப்பட்ட இந்த தொடர்த் தற்கொலைத் தாக்குதலை ஒரு சில இளைஞர்கள் தனித்து நின்று செய்திருக்க முடியாது. இந்தத் தாக்குதல்களுக்கு பின்னால் ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுகளின் சதி நிச்சயம் இருந்திருக்க வேண்டும். பிராந்திய மற்றும் உள்நாட்டு சக்திகள் தமது நலன் கருதி அத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். அமெரிக்க தலைமையிலான இன்றைய உலக ஒழுங்கையும், உலகில் இடம்பெற்று வருகின்ற வன்முறை மாதிரிகளையும் உண்ணிப்பாக கவனிக்கும் எவரும் இந்த முடிவுக்கே வருவார்கள். ஏற்கனவே அமெரிக்க – பிரித்தானிய ஆதிக்க போட்டிக்கும், அமெரிக்க-இந்தியக் கூட்டு நலன் மற்றும் சீனாவின் பட்டுப்பாதை தொடர்பான இந்து சமுத்திர பிராந்திய முரண்பாட்டுக்கும் மத்தியில் அகப்பட்டுள்ள இலங்கையில் அதிர்ச்சிதரும் அரசியல் மாற்றங்களும், முரண்பாடுகளும் பிரவேசம் செய்வது எந்நேரத்தில் எதிர்பார்க்க வேண்டியதே. அந்த வகையில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இத்தகைய தாக்குதலின் அரங்கேற்றம் ஆச்சரியமானதல்ல. மேலும் இந்த நேரடித் தலையீடு விரைவுபடுத்தப்பட்டமைக்கு இலங்கையின் கரையோரங்களில் 1.3 ரில்லியன் கனவளவு அடி அளவுள்ள இயற்கை வாயுவும், 10 மில்லியன் பீப்பாய்க்களுக்கு மேலான எண்ணெய் வளமும் இருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளமையும் ஒரு பக்க காரணமாக அமைந்திருக்கலாம். எனவே இந்தத்தாக்குதலை ஸஹ்ரான் மௌலவி தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று நடத்தியிருந்தாலும் அவர்களை இதுவரை காலமும் பாதுகாத்தவர்களும், தாக்குதலுக்கு பொருளாதார உதவி செய்தவர்களும், சீ4 ரக குண்டுவெடிப்பு இரசாயனங்களை பெருந்தொகையாக வாரி வழங்கியவர்களும், புலனாய்வுத்துறையினரை தாக்குதல் நடந்து முடியும் வரை கண்ணயர வைத்து களமமைத்துக் கொடுத்தவர்களும் ஏகாதிபத்திய நாடுகளும், அதற்கு துணைபோன இலங்கைக்குள் உள்ளிருக்கும் அரச மட்ட சக்திகளுமாகும் என்பதை முழு இலங்கை சமூகமும், குறிப்பாக முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


2) ஐ.எஸ் அல்லது ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமிய பெயரில் இயங்கும் பயங்கரவாத அமைப்பு இந்தத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதும், அதன் தலைவருக்கு தாக்குதலை நிகழ்த்தியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருப்பதும் இந்தச்செயலை முஸ்லிம்களுடனும், இஸ்லாத்துடனும், இஸ்லாமிய அரசு பற்றிய இஸ்லாத்தின் கோட்பாட்டுடனும் முடிச்சுப்போட்டு பார்க்க அனைவரையும் தூண்டியிருக்கிறது. எந்தவொரு முடிவுக்கும் விரைந்து வருவதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அமெரிக்காவின் உளவுக்கட்டமைப்பால் தனது நிகழ்ச்சி நிரலை உலகில் வியாபிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். இந்த யதார்த்தத்தை வெறும் கொள்கை மேலிட்டாலும், உணர்ச்சிப்பெருக்காலும் போராட்ட களத்துக்குள் நுழையும் ஸஹ்ரான் மௌலவி போன்ற இளைஞர்கள் கூட, அவர்கள் வெடித்துச் சிதரும் வரையில் உணர்ந்திருக்க மாட்டார்கள்.


பிரச்சனை


எனவே நாம் எதிர்கொண்டுள்ள ஆபத்து நாம் நினைப்பதை விட பாரியது என்பதை நாம் வெறுத்தாலும் ஜீரணித்துத்தான் ஆக வேண்டும். தமது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை தமக்கேயுரிய காலவரைறைகளுக்குள் கனகச்சிதமாக நடத்தி முடிப்பதற்கு இன்று இந்த முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்துவதே அவர்களுக்கு உசிதமாக இருந்திருக்கிறது. வேரொரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வேரொரு தரப்பை தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றைய உலக ஒழுங்கு அளவில் பாரிய மாற்றம் வராத வரையில் இந்நிலையை தடுத்து நிறுத்த சிறிய அரசுகளுக்குக்கூட முடியாது என்பது துர்பாக்கியமானதுதான். எனினும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுவதற்கு சோரம் போகும் அளவுக்கு, அல்லது அதற்கு பழிபோகும் அளவுக்கு இந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு முன்னால் இருந்த நியாயாதிக்கம்தான் என்ன என்பதை ஆராய்வது எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனையின் ஆழத்தை உணர மிகவும் முக்கியமாகும்.


இலங்கை முஸ்லிம்கள்


இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு மேலானது. இந்த காலப்பகுதியில் முடியாட்சிகளுக்குள்ளும், மேற்கின் காலனித்துவத்துக்குள்ளும், பின்னர் சுதந்திரத்தின் பின்னரான குடியாட்சிக்குள்ளும் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் சுதந்திரத்தை தொடர்ந்து உருவான இனமோதல் சூழ்நிலைகளை கடந்து வந்திருகிறார்கள். ஏறத்தாழ 3 தசாப்த்த கால யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2009இல் போர் முற்றுப்பெற்றதன் பின்னர் தீவிரவாத பௌத்த தேசியவாத குழுக்களின் வன்முறைகளுக்கும் அவர்கள் முகம்கொடுத்து வந்தார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட காலகட்டங்களை தாண்டி வந்த முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் பல மேடு பள்ளங்களையும், புரக்கணிப்புக்களையும், அழிவுகளையும், வேதனைகளையும் அவர்கள் சுமந்து வந்தாலும் அவற்றிற்கு விமோசனம் தேடும் மார்க்கமாக வன்முறையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மாற்றமாக எப்போதும் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் மென்மையான போராட்ட வழிமுறைகளைத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். எனினும் அந்நிலைக்கு பிரள்வான ஓர் போக்காக இன்றைய தொடர் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கின்றன என்றால் அதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் காரணம் இருந்திருக்க வேண்டும் என்பதை சற்று நிதானமாக நின்று சீர்தூக்கிப் பார்க்காமல் நாம் கடந்து சென்றுவிடக்கூடாது.


பின்னணி


ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகக் தொடர்ந்த கொடிய யுத்தம் 2009 இல் முடிவுக்கு வந்தபோது நாட்டின் ஏனைய மக்களைப் போன்றே முஸ்லிம் சமூகமும் ஒரு நிம்மதியான வாழ்வை எதிர்பார்த்து நின்றார்கள். எனினும் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வண்ணம் அவர்கள் பிரவேசித்ததோ அதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு இருண்ட யுகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் மட்டங்கள் தம்மை ஒரு புதிய எதிரியாக சித்தரித்து பள்ளாங்குழி விளையாடுவதை அவர்கள் நேரடியாகப் பார்த்தார்கள். தமக்கும், தாம் உயிரிலும் மேலாகக் கருதும் தமது மார்க்கத்திற்கும் எதிரான போர்மேகம் சூழ்ந்து வருவதை அவர்கள் உணரத் தொடங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான வீணான குற்றச்சாட்டுக்களும், விசமப் பிரச்சாரங்களும் ஊடகங்களிலே முடுக்கி விடப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஆங்காங்கே முளைத்து தான்தோன்றித்தனமாக தாண்டவம் ஆட ஆரம்பித்தார்கள். அவர்கள் அரச அனுசரணையுடன் நாடெங்கும் வலம் வர ஆரம்பித்த போது முஸ்லிம்கள் தமது அடையாளத்திற்கும், பாதுகாப்புக்கும், இருப்புக்கும் அச்சுறுத்தல் அவசரமாக வந்து கொண்டிருப்பதாக உணர ஆரம்பித்தார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நச்சுக்கருத்துகள் கட்டுப்பாடின்றி வளர ஆரம்பித்து முதலில் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் 4 அப்பாவி இளைஞர்களின் உயிர்களைக் குடித்தது. பலரைக் நிரந்தர அங்கவீனர்களாக மாற்றியது. பலகோடிக்கணக்கான சொத்திழப்புக்களை ஏற்படுத்தியது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த கொடிய நிகழ்வுகளால் பாதிப்படைந்த முஸ்லிம் சமூகத்தின் மஹிந்தவுக்கெதிரான எதிர்ப்புணர்வினைப் பயன்படுத்தி 2015 ஜனவரில் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் முஸ்லிம்களின் துயரைத் துடைப்பதற்கு பதிலாக அவர்கள் ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்குள் முக்கிய மூன்று கலவரங்கள் முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. கின்தொட்ட, அம்பாறை எனத்தொடர்ந்த இந்தத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக சென்றவருடம், முன்புள்ள கலவரங்களை விட மிகப்பெரிய திட்டமிடலுடனான தாக்குதலாக திகண கலவரம் நடந்து முடிந்தது. அங்கும் பல சொத்திழப்புக்களுக்கும், காயங்களுக்கும் உட்பட்ட முஸ்லிம் சமூகம் ஒரு இளைஞனின் உயிரையும் பறிகொடுத்தது.


தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கூறுவேண்டிய அரசு கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானித்த முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாப்பது எப்படி என செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் தமது அரசியல் தலைமைகளினதும், மார்க்கத் தலைமைகளினதும் கையாளாகத்தனத்தை நேரடியாகக் கண்டார்கள். இந்நிலையை தமது கண்ணியத்தின் மீது விழுந்த பலந்த அடியாக அவர்கள் அடையாளப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்நிலையை அவர்கள் சந்தித்தது வெறும் ஒரு வருடத்திற்கு முன்னரே என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். எனவே தமது எதிர்புணர்வை எவ்வாறு பிரயோகிப்பது என்றறியாத சந்திக்கு வந்த இளைஞர்களின் ஒரு பிரிவினர் இயல்பாக வன்முறையை நோக்கி அடைக்களம் புகுந்ததை நாம் வியப்பாக பார்க்க வேண்டியதில்லை. இன்று வெடித்துள்ள குண்டுகளுக்கு பின்னால் இருந்த வன்மமான மனோநிலைக்கு இளைஞர்களை தள்ளிய உடனடிக்காரணங்களாக இவையெல்லாம் பங்காற்றின.


இரண்டாவது, சர்வதேசம் முழுதும் முஸ்லிம்களுக்கு எதிராக அளவுகணக்கில்லாமல் தொடுக்கப்பட்ட வன்முறைகளும், யுத்தங்களும், இஸ்லாத்தின் புனித அம்சங்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களும் நீண்ட காலமாக இலங்கை முஸ்லிம் இளைஞர்களையும் மானசீகமாக பாதித்திருந்தது. ஒரு நீண்ட கால வடுவாகத்தொடர்ந்த இந்த உளநிலையை அதிகரித்த இணையப் பாவணையும், சமூக ஊடகங்களின் அதிகூடிய பயன்பாடும், ஒரு சில இளைஞர்களின் வெளிநாட்டு அனுபவங்களும் வன்முறையின் செயல் வீரர்களாக துரிதமாக மாற்றுவதில் பாரிய பங்களித்தன.


மூன்றாவது, ஒரு காலத்தில் அமெரிக்க தலைமையிலான மேற்குலகுக்கு எதிரான போராட்ட நாயகனாக ஒசாமாவைக் கருதிய சில முஸ்லிம் இளைஞர்களைப்போல் 2014இல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசை பிரகடனப்படுத்திய போது அபுபக்ர் அல் பக்தாதியை சிலர் கதாநாயகனாக பார்க்கத் தொடங்கினார்கள். அதிலும் குறிப்பாக உலகளாவிய முஸ்லிம்களின் நீண்டகால தேடலாக இருக்கும் கிலாஃபத்தை நிறுவி, தன்னை ஒரு கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளுமாறு அறிவித்த பக்தாதியின் அழைப்புக்கு பதில் கூறுவதற்கு இவர்கள் முடிவெடுத்தார்கள். ஆர்வ மிகுதியால் உடனடித்தீர்வின் மீதும், தமது உணர்ச்சிகளின் மீதும் தமது செயற்பாட்டைக் கட்டமைத்த சில இலங்கை இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் இன் தோற்றம் பற்றியோ, பக்தாதியின் பின்னணி பற்றியோ நேரடியான எத்தகைய பிரக்ஞையுமற்று தம்மை அவர்களின் சிந்தனைகளுக்கு பழிகொடுக்க தயாரானார்கள். 2015இல் இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் இன் இஸ்லாமிய அரசுக்கு சென்று உயிர் நீத்த நிலாம் முஹ்ஷினின் உதாரணம் இதற்கொரு நல்ல சான்றாகும். ஐஎஸ்ஐஎஸ் போன்ற பல் பரிமாணப்பின்னணி கொண்ட தீவிரவாத அமைப்புக்களுக்கு தமது கட்டுப்பாட்டிலுள்ள ஆட்புல எல்லைகளின் மீதிருக்கும் கவனத்தைப்போலவே தேவைப்பட்டால் நிகழ்த்துவதற்காக இலகுவான இலக்குகளுக்கு அண்மையில் பல சிலீப்பர் செல்களைப் பாதுகாத்து வைத்திருப்பது ஒரு முக்கிய வியூகமாக இருந்து வந்துள்ளதை நாம் அண்மிய உலக அனுபமாகக் காண்கிறோம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.


எமது கணிப்பு


எமது கணிப்பின் படி இன்று இலங்கையில் நிகழ்த்ப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் நடவடிக்கை இலங்கைக்குள் இருந்து தீர்மானிக்கப்பட்டதல்ல. ஐஎஸ்ஐஎஸ் கடந்த மாதம் சிரியாவின் பக்கூஷில் தமது இறுதி இருப்பையும் இழந்துள்ள நிலையில் உலகில் தமது பிரசன்னத்தை காட்டுவதற்காகவும், நியூஸிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பதிலடி என்ற ஓர் நியாயத்தைக்கூறியும் இலங்கை சிலீப்பர் செல்லுக்கு வழங்கிய ஒரு கட்டளையே இது. பக்தாதியை தமது கலீஃபாவாக கருதிய ஸஹ்ரான் போன்றோர்களுக்கு அந்த கட்டளைக்கு மாற்றமாக ஒன்றும் செய்யவும் முடியாது. ஏனெனில் ஆரம்பத்தில் ஸஹ்ரான் மௌலவியின் அணியின் இலக்கு தீவிர பௌத்த தேசியவாதமாகத்தான் இருந்தது. அதுதான் தர்க்க ரீதியாக யதார்த்த பூர்வமானதுமாகும். அதனை அவர்களின் இறுதிக்கால முகநூல் வெளியீடுகளும் தெளிவாக சுட்டி நிற்கின்றன. இந்தத்தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் மூலாபாய ரீதியில் ஏகாதிபத்திய கிருஸ்தவ மேற்குலகிற்கு ஒரு பாடம் புகட்டலாம் என்பதும், இலங்கைக்குள் ஜிஹாதிய களத்தை திறந்து வைக்கலாம் என்பதும், பௌத்தத் தீவிரவாதத்திற்கும் சேர்த்து இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு கூறப்பட்ட சமாதானமாக இருக்கலாம்.


இஸ்லாமிய சித்தாந்தம்


இந்த இளைஞர்களின் செயல்களுக்கு உலக மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு ஓர் முக்கிய காரணமாக அமைந்ததோ, அதேபோன்று அவர்கள் இஸ்லாமிய சித்தாந்தம் தொடர்பாகவும், அதன் சில முக்கிய கோட்பாடுகள் தொடர்பாகவும் கொண்டிருந்த சிந்தனைகளும், நம்பிக்கைகளும் அதற்கு பிரதான அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன என்பதையும் நாம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இஸ்லாமிய அரசு அல்லது கிலாஃபத் பற்றிய கோட்பாடுகள், ஷரீஆவை உலகில் அமூல்படுத்தல் பற்றிய எண்ணங்கள், உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஓர் உம்மத் என்ற அல் உம்மாஹ் பற்றிய சிந்தனைகள், இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றிய அவர்களின் எண்ணங்கள், இறை விசுவாசத்தின் மீதான ஆதரவும், இறை நிராகரிப்பின் மீதான வெறுப்பும் (அல்வலா வல்பரா) பற்றிய புரிதல்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் பற்றிய நிலைப்பாடுகள், தாருள் இஸ்லாம்(இஸ்லாமிய ஆட்சி இடம்பெறும் நிலம்), தாருள் குப்ர்(இஸ்லாம் ஆட்சி இடம்பெறாத நிலம்) , தாருள் கர்ஃப்; (இஸ்லாமிய ஆட்சி இடம்பெறாத யுத்தகளமாகக் கருதக்கூடிய நிலம்) பற்றிய விளக்கங்கள், அல் ஜிஹாத், அல் கிதால், ஹிஜ்ரா (இஸ்லாத்திற்காக நாட்டைத்துறந்து வெளியேறல்) பற்றிய வியாக்கியானங்கள், முர்தத்களை(இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை) எதிர்கொள்ளல் பற்றிய கருத்துகள், பாதுகாப்புக் கருதி தாக்குதல்கள் நடத்தல் தொடர்பான சிந்தனைகள், முஸ்லிம் அல்லாதோருடன் உறவாடுதல் பற்றிய புரிதல்கள் போன்ற இஸ்லாமிய சிந்தனைகளும், கோட்பாடுகளும் தவறாக வியாக்கியானப்படுத்தப்படுவதன் மூலம் பிழையான முடிவுகளை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் தள்ளப்பட்டு வருவதை நாம் உலகம் முழுவதிலும் காண்கிறோம். அதற்கொப்பான ஒரு பாதிப்பின் விளைவே இன்று இந்தத்தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகளிலும் நாம் மிகத் தெளிவாக இனம் காண்கிறோம்.


மேற்குறித்த சிந்தனைகள் எல்லாம் முற்றுமுழுதான இஸ்லாமிய கோட்பாடுகளாக இருந்தாலும் முஸ்லிம்களை உண்மையாகப் பிரதிபளிக்கின்ற ஒர் உலகத் தலைமை இல்லாத நிலையிலும், உலகளாவிய முஸ்லிம்கள் மிகச் சவாலான ஒரு காலப்பகுதியை கடந்து வரும் இந்தப் பொழுதுகளிலும் அந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகின்ற முறைகள்தான் சிக்கலுக்குள்ளாகியிருக்கின்றன. அந்த சிக்கல்களிலிருந்து இஸ்லாத்திற்கு முரணான போராட்ட வடிவங்களும், சிந்தனைப்போக்குகளும் உருவாகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன. இத்தகைய போராட்ட முறைகளால் முஸ்லிம் உம்மத் அடைகின்ற நன்மைகள் எதுவும் கிடையாது என்பதை அவற்றில் சம்பந்தப்படுவர்கள் உணர முன்னரே அவர்கள் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டு விடுகிறார்கள். இறுதியில் அவற்றின் விபரீதமான விளைவுகளை முழு முஸ்லிம் உம்மத்தும் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிறுத்தப்படுகின்றது.


இரு துருவ நிலைகள்


இந்த குற்ற உணர்வின் பிரதிபளிப்பாக உண்மையான இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய முஸ்லிம் சமூக தலைமைகள் தோற்கடிக்கப்பட்ட தற்காப்பு உணர்வுள்ள தலைமைகளாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை வேறொரு திசைக்கு இழுத்துச் செல்கிறார்கள். இவர்கள் தவறாக மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் குழுக்களின் போராட்ட வழிமுறைகளால் கவரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை துணிச்சலாக எதிர்கொண்டு சீர்படுத்த வேண்டியவர்கள், அவர்களின் உண்மையான உளக்குமுறல்களுக்கு செவிசாய்த்து அவர்களின் போராட்ட உணர்வை முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக சரியான திசையில் பயன்படுத்திருக்க வேண்டியவர்கள் வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பலிபோய் இஸ்லாத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கும் பாதையை தேர்ந்தெடுக்கத் துணிந்து விடுகிறார்கள். இந்தப்போக்கு காலப்போக்கில் எதிரும் புதிருமான இரண்டு தீவிர துருவ நிலைகளை சமூகத்தில் உருவாக்குவதற்கு துணை செய்கின்றது.


இந்நிலை முஸ்லிம் உம்மத்துக்குள் ஒரு பக்கம் முஸ்லிம் உம்மாவுக்கு எதிரான அனைத்து சதிவலைகளையும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நற்பண்பு, பிரார்த்தனை என்ற பெயரில் அரசியல் நீக்கம் செய்து பார்க்க மட்டும் வழிகாட்டுகின்ற பாராம்பரிய அறிஞர்களையும், மறுபக்கம் அவர்கள் அனைவரையும் எதிரியின் வளையில் விழுந்த சோரம் போனவர்களாக குற்றம் சாட்டி தீவிர எதிர்நடவடிக்கைகளின் பால் அழைக்கின்ற இளைஞர்களையும் உருவாக்கி இரு முரண்பட்ட தரப்புக்கள் தோன்றுவதற்கு வழி வகுத்து விடுகின்றது. முஸ்லிம் உம்மாஹ்வுக்குள் உலகின் பல பிராந்தியங்களிலும் தோன்றியிருக்குளம் இந்த சிக்கலான முரண்பாடு இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் நடுச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.


முஸ்லிம் தலைமைகள்


முஸ்லிம் தலைமைகள் இன்றைய பூகோள அரசியலையும், முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினையின் விபரீதத்தையும் துல்லியமாகப் புரிந்து செயற்படாத அலட்சியப்போக்கினால் இன்று அவர்கள் எதனைத் தடுக்க நாடினார்களோ அதனையே மிகப்பாரிய பூகம்பமாக எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் சில விடயங்கள் குறித்து இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும்.


முஸ்லிம் அறிஞர்களும், தலைவர்களும் இலங்கையின் தேசிய எல்லைக்குள் தமது சிந்தனையை சுருக்காமல் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையின் ஆழத்தை உணர முற்பட வேண்டும். தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற இஸ்லாத்திற்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்காவின் தலைமையிலும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றுவரும் போரியல் தந்திரோபாயங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அது சிந்தனா ரீதியான தாக்குதலாகவோ, பௌதீக ரீதியான தாக்குதல்களாகவோ பல வடிவங்களை எடுக்கலாம் என்பதை அவர்கள் தெளிவாக உணர வேண்டும். அந்த அறிவு மற்றும் அனுபவங்களின் ஒளியில் இலங்கையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் அத்துமீறல்களை நேர்மையான முறையில் துணிச்சலுடன் முகம்கொடுத்து சமூகத்தின் காப்பரணாக தம்மை நிலைநிறுத்த வேண்டும்.

பீதி மனோநிலையிலிருந்தும், தக்கன பிழைக்கும் மனோபாவத்திலிருந்தும் வெளியில் வந்து பிறரின் நிகழ்ச்சி நிரலுக்கு பழியாகாது அல்லாஹ்(சுபு) அனைத்தையும் தமது அதிகாரத்துக்குள் வைத்திருப்பவன் என்பதை ஆழமாக உணர்ந்து சத்தியத்தை சான்றுபகர்கின்ற முன்மாதிரிகளாக திகழ வேண்டும். சில தற்காலிக அடைவுகளுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தவறிழைப்பவர்களை ஊக்கிவிக்கும் வகையில் சமரசம் என்ற பாதையை தேர்ந்தெடுத்து இஸ்லாத்தின் தெளிவான எல்லைகளை தாமும் தாண்டி, சமூகத்தையும் தாண்டுவதற்கு தூண்டிவிடக்கூடாது.


இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசமப்பிரச்சாரங்களையும், தவறான நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் பணியிலும், அதற்கு காரணமானவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற பணியிலும் பின்வாங்காது இயங்க வேண்டும். பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இஸ்லாத்தை முன்வைக்காது இஸ்லாத்தின் உண்மை நிலைப்பாடுகளை முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முன்வைக்க களம் இறங்க வேண்டும். உம்மத், ஷரீயத், கிலாபத், ஜிஹாத் போன்ற முஸ்லிம்களின் முக்கிய அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய சரியாக விழிப்புணர்வை சமூகவெளியில் தெளிவுபடுத்த வேண்டும்.


இன்று நடந்து முடிந்துள்ள தாக்குதல்களும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல் முயற்சிகளுக்கும் பின்னால் இருக்கின்ற சூத்திரதாரிகள் யார் என்பது பற்றி பொறுப்புக்கூற வேண்டியவர்களை தொடர்ந்து கோள்விக்குட்படுத்தி வரவேண்டும். வன்முறைகளையும், ஆக்கிரமிப்புக்களையும், மோசடிகளையும், அசிங்கமான நடத்தைகளையும் அடிப்படையாக வைத்து தொடரப்படும் இன்றைய முதலாளித்துவ உலக ஒழுங்கில் காணப்படும் ஓட்டைகளையும், அதற்கு காரணமானவர்களின் அயோக்கியத்தனங்களையும் கேள்விக்குட்படுத்தி தம்மால் முடியுமான அளவில் அதற்கு எதிராக போராட முன்வரவேண்டும். அது குறித்த பிரக்ஞையுள்ள அந்நிய சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகளையும் தமது போராட்டங்களின் பங்காளர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சமூகத்துக்குள் இருக்கின்ற மாற்றுக்கருத்தாளர்களின் நியாயமான கருத்துக்களுக்கும் செவிமடுத்து அவர்களுக்கும் தமக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கப் பாடுபட வேண்டும்.


மேற்குறிப்பிட்ட விடயங்கள் குறித்து தூரநோக்கோடு அன்றே சிந்தித்து செயற்பட்டிருந்திருந்தால் இஸ்லாத்தின் சான்றுபகர்தல் என்ற பணியை முழுமையாகச் செய்யவும், முஸ்லிம்கள் தவறான பாதைகளில் பணிப்பதை குறைக்கவும், பிறர் முஸ்லிம்கள் பற்றிய சரியான புரிதலுடன் உறவாடும் சந்தர்ப்பத்தைக் கூட்டவும், எமது உரிமைகளை பாதுகாப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் வழி செய்திருக்கும். தமது ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து தமது உணர்வுகளால் காவு கொள்ளப்பட்டு முழு நாட்டையும் அழிப்புப்பாதையில் செலுத்தத் துணிந்த இளைஞர்களைக் கட்டுப்படுத்தியிருக்கும்.


இன்னும் ஒன்றும் குறைந்து போகவில்லை. இன்று நாம் உண்மையிலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் குறித்து பாகாப்புத்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டிய கடப்பாட்டுடன் இருக்கிறோம். ஆனால் இந்த இக்கட்டான சூழலில் நாம் சந்தேகிக்கின்ற அனைவரையும் அல்லது எம்மிலிருந்து சற்று வித்தியாசமான கருத்துக்கள் கொண்ட அனைவரையும் எடுத்ததற்கெல்லாம் காட்டிக்கொடுக்கின்ற மனோநிலைக்குள் நுழைந்து விடாமல் நமது இளைஞர்களை சரியான திசைகளை நோக்கி வழிநடாத்துபவர்களாய் மாற வேண்டும். எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடிய காரியத்தை நாம் வன்மையாக எதிர்க்கின்ற அதே தருணத்தில் வெறும் பாதுகாப்பு உணர்வுகளால் மாத்திரம் உந்தப்பட்டு அரசின் அதிகார அடக்குமுறை அனைத்துக்கும் பணிந்து போகின்ற அச்ச நிலைக்கு எமது மக்களை நாம் ஆட்படுத்தக்கூடாது. தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கு எமக்கு நாமே தடைகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மேலும் அந்த அடக்குமுறை மனோபாவத்தை நோக்கி எமது அரசும், ஏனைய அந்நிய சமூகங்களும்; செல்கின்ற பாதையிலிருந்தும் அவர்களையும் நாம் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.


இலங்கை அரசு


இலங்கை அரசையும், அரசாங்கங்களையும் பொருத்தவரையில் நாடு இன்று எதிர்நோக்கியிருக்கும் இந்த பாரிய சவால்களிலிருந்து வெளியில் வருவதற்கு, அவர்கள், தாம் யாரை ஆட்சி செய்து வருகின்றோம், தமது ஆட்சியின் கீழ் வாழ்கின்ற மக்களின் நியாயமான அபிலாசைகள் என்ன என்பது பற்றிய சரியான புரிதலுக்கு வருவது முழுமுதற் கடமையாகும். அதற்கு முஸ்லிம் சமூகம் தன்னைப்பற்றிய உண்மையான முகத்தை அரசுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் வெளிக்காட்ட வேண்டும். அது சூழ்நிலைக்கைதியான தோற்றகடிக்கபட்ட முகமாகவோ அல்லது வீணான வீராப்பின் முகமாகவோ இருக்கக்கூடாது. மாறாக உண்மையான இஸ்லாத்தை சான்று பகரும் முகமாக இருக்க வேண்டும்.


இரண்டாவது, இலங்கை உலகில் நடக்கின்ற அநியாயங்களுக்கும், உள்நாட்டில் நடக்கின்ற அநியாயங்களுக்கும், அது யாரின் பெயரால் இடம்பெற்றாலும், குறுகிய நலன்களை கருத்திற் கொள்ளாமல் அவறிற்கு எதிராக, உலகிலுள்ள நல்ல சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தம்மால் முடிந்த வரை போராட வேண்டும். குறைத்த பட்சம் தன்னை அத்தகைய அநியாயங்களுடன் கூட்டுச்சேராமல் நடுநிலையில் நிற்பதற்காகவேனும் முதலில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயமாக நடக்கின்ற சிந்தனா ரீதியான மற்றும் பௌதீக ரீதியான தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பதோ, அதனை ஊக்கிவிப்பதோ இலங்கை அரசின் பணியாக இருக்கக்கூடாது. சர்வதேச மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கு அது விலைபோகக்கூடாது. தற்போது அமூலுக்கு வந்திருக்கும் நிகாப் மற்றும் புர்காவுக்கு எதிரான தடை இலங்கை அரசு தவறான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


அதேபோல இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மாற்றுவற்கான பாதையில் இலங்கையும் அடியெடுத்து வைக்க வேண்டும். அந்த துணிச்சலான, தீர்க்ககரமான செயல் மாத்திரம்தான் இலங்கைக்கு பொருளாதார விமோசனத்தையும், பாதுகாப்பையும், சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுத்தரும் என்பதை அவர்கள் நேரந்தாழ்த்தாது உணர வேண்டும்.


கொடிய முதலாளித்துவ மறைகரங்கள் இலங்கைக்குள் நேரடியாக தமது இரத்தக்கறை படித்த கைகளை உள் நுழைத்துள்ளன. இனி எமது இரத்தங்கள் எவ்வித பெறுமதியும் அற்று ஓட்டப்படலாம். ஆனால் அவர்களின் சதிகள் அனைத்தையும் வெறும் ஒரு சிலந்தியின் வளையுடன் ஒப்பிடும் அல்லாஹ்(சுபு), அனைத்திலும் ஆற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து நாம் நிமிர்ந்து நிற்க கற்றுக் கொள்ள வேண்டிய காலமிது.


0 Comments:

Post a Comment