ஸஹ்ரான் பயிற்சி பெற்ற இடம் தொடர்பில் தகவல்கள்


கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதிகள் இந்தியாவின் கேரலா மற்றும் காஸ்மீர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி வெளிநாட்டு ஊடகமொன்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இதனைக் கூறியுள்ளது.

குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதியொருவர் இந்தியாவுக்கு வந்துள்ளதாக இலங்கையின் உயர் மட்ட அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளதாக சகோதர செய்தி ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இதற்கு மாற்றமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்கள் சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகளிடமிருந்தே பெற்றதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கேரலா, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் காணப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புடையதாக கூறப்படும் ஸஃரான் ஹாசிமின் இந்திய விஜயத்தின் நோக்கம் மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் என்பவற்றை வழங்க இந்திய பாதுகாப்புப் பிரிவு மறுப்புத் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் இந்தியாவின் சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். (மு)

0 Comments:

Post a Comment