பாடசாலைகளை ஆரம்பிக்க மேலும் ஒரு மாதம் செல்லும்

04 கட்டங்களில் ஆரம்பிக்க திட்டம்
சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தினத்தில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதகாலம் வரை 
செல்லும் எனவும், கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
இன்று (11) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வருவதன் இறுதிக்கட்டமாக மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக் கருதி பாதுகாப்பானதொரு நாளில் பாடசாலைகள் திறக்கப்படும் என்பதோடு, அத்தினத்தை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார். 
அத்தினத்தை அறிவித்த பின்னர், நாடு பூராகவுமுள்ள பாடசாலைகள் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு இன்னும் நான்கு நாட்களுக்கு மூடப்படும் எனத் தெரிவித்த அவர், முதலில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 
இதன் பின்னர் க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம் மற்றும் அதற்கு கீழுள்ள தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார். 
மாணவர்கள் கைகளை கழுவுதல் உட்பட அவர்களின் உடல் வெப்பநிலையை கணிப்பிடுவதற்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சால் சகல பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார். -தினகரன்-

0 Comments:

Post a Comment