ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லும் கனவு நிறைவேறுமா? இதோ விளக்கம்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தன்னை நியமிக்குமாறு அக்கட்சியின் செயலாளர் வணக்கத்திற்குரிய விமலதிஸ்ஸ தேரர் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றின் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில், குறித்த தேரர் எங்கள் மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதோடு பிரிதொரு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தில் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் கலகொட அத்தே ஞானசார தேரர் குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன், அவரின் பெயர் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பெயரில் குறிப்பிடப்படவில்லை.


இருந்த போதிலும் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றால் தேர்தல் சட்டத்திற்கு அமைய, எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலுக்கு அல்லது ஏதாவது ஒரு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் இராஜினாமாசெய்வாராயின் அந்த வெற்றிடத்திற்கு கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படலாம். இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக சட்டமா அதிபரிடம் வியாகியானம் கோரப்பட்டுள்ளது. அத்துடன் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலுக்குரிய நபர்களின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமான முறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தலைவர் சமன் பெரேரா எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்

0 Comments:

Post a Comment