இஸ்ரேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இரான்? இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்ன செய்கிறது?



இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.


இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. என்ன நடக்கிறது?


இஸ்ரேல் தாக்குதலும் இரானின் பதிலடியும்

இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார்.


இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.


இரான் தாக்குதலில காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
ராமத் கானில் உள்ள ஷெபா மருத்துவமனையில் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கேயும் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.


100க்கும் குறைவான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார்.

எக்ஸ் தளத்தில் அவர் தனது பதிவில், பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

"குறைந்த எண்ணிக்கையிலான கட்டடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. அவற்றில் சில இரான் ஏவுகணைகளை இடைமறித்த போது வெளிப்பட்ட சிதறல்களால் நேர்ந்தவை," என்று அவர் கூறுகிறார்.


இரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

2 இஸ்ரேலிய போர் விமானங்கள் வீழ்ந்தனவா?

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த கூற்று பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.


இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார்.


இரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்?

இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.
இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அங்குள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை அதன் பத்திரிகையாளர்களில் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


விமான நிலையப் பகுதியில் 'வெடிப்பு' ஏற்பட்டதாகக் கூறிய இரானைச் சேர்ந்த மெஹ்ர் செய்தி முகமை, அப்பகுதியில் இருந்து கனத்த புகை எழுவதைக் காட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.