தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியை வழங்கினார் கோட்டா- பரபரப்பு தகவல்!
| April 30, 2019
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியொன்றினை பெற்றுக்கொடுத்தார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே நாட்டில் அடைப்படை வாதத்தினை தேற்றுவிக்க கோட்டபாய ராஜபக்ஷ பல முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “241 A, ஸ்ரீ சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளார்.
குறித்த அமைப்பின் அலுவலகத்தை அமைப்பதற்கே அவர் இந்த காணியை வழங்கினார். இவ்வாறே அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் அவர் அமைதியாக இருக்கும் முஸ்லீம் இனத்தை இரண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வாறு அனைத்து செயற்பாடுகளையும் கீழ்த்தரமான அரசியல் யுத்தியை கொண்டு அவர் மேற்கொண்டார்.
இதேவேளை அடிப்படைவாதத்தை போதிக்கும் பள்ளிகள் 200 ஐ கட்டியதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த சம்பவத்திற்கும் கோட்டவே உறுதுணையாக இருந்தார்” என அவர் மேலும் கூறினார்.