Breaking

Sunday, April 7, 2019

வரட்சி காலநிலை நீடித்து வருகின்றது


நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மழை பொய்த்து போயுள்ளது. இதன் விளைவாக வரட்சி காலநிலை நீடித்து வருகின்றது. இதேவேளை சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலமாகவும் இந்த நாட்கள் விளங்குகின்றன. அதன் காரணத்தினால் வரட்சியுடன் சேர்த்து கடும் உஷ்ணமும் நாட்டில் நிலவி வருகின்றது.

வரட்சியின் விளைவாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் பெரிதும் குறைவடைந்துள்ளது. இதன் காரணத்தினால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் பெரும் பகுதி தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.

அதேநேரம் தற்போதைய வரட்சி காலநிலைமையின் விளைவாக குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறுவிதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக சில பிரதேசங்களைச் சேர்;ந்த மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல்கள் தூரம் பயணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் ஏற்பாடுகளின் ஊடாக குடிநீர் வழங்கப்படுகின்ற போதிலும் அதனைப் பெற்றுக்கொள்ளவும் மணித்தியாலயக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இவை இவ்வாறிருக்க, வரட்சி காலநிலையின் விளைவாக கங்கைகளதும், ஆறுகளதும் நீர் மட்டங்கள் பெரிதும் குறைவடைந்துள்ளன. அதனால் சில கங்கைகளதும் ஆறுகளதும் நீரில் கடல் நீர் கலந்துள்ளது.

அந்த வகையில்; பேருவளை, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் குழாய்களில் தற்போது உவர் நீரே கிடைக்கப்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்து வரும் புகார் நல்ல உதாரணமாகும்.

மேலும் நீரைப் பெற்றுக்கொள்வதில் கால்நடைகள் உள்ளிட்ட ஏனைய உயிரினங்களும் இந்த நாட்களில் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளன. அவை நீரைத் தேடி மனித நடமாட்டப் பிரதேங்களுக்குள் வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்தோடு தண்ணீரின்றி மரங்களும், பயிர்களும் கூட அழிவடையும் நிலைக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக புத்தளம், குருநாகல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தென்னைகள் கூட அழிவடையும் நிலைமை ஏற்பட்டு இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை தற்போதைய கடும் உஷ்ண காலநிலையின் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களும் நிலவுகின்றன. அதனால் இந்த நாட்களில் பொதுமக்கள் விழிப்பாகவும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இவ்வாறு மனிதர்களுக்கு மாத்திரமல்லாமல் கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் மரஞ்செடிகளுக்கும் பல்வேறு விதமான அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ள இந்த வரட்சிக் காலநிலை காரணமாக நாட்டில் இருபது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்த மாவட்டங்களில் 31,931 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

அதேநேரம் வரட்சியின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மலையகப் பிரதேசத்தில் அரசாங்கம் அண்மையில் மேற்கொண்டது.

தற்போதைய வரட்சிக் காலநிலைக்கு முகம் கொடுப்பதற்காக பலவித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த நடவடிக்கைகளாலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரட்சிக் காலநிலை நிலவுவதை பரவலாக அவதானிக்க முடிகின்றது. என்றாலும் நாட்டில் என்ன தான் வரட்சி ஏற்பட்டாலும் வருடாந்தம் கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியில் குறைவு ஏற்படுவதில்லை. ஒப்பீட்டளவில் ஒவ்வொரு வருடமும் சராசரி மழை வீழச்சி கிடைக்கப்பெறவே செய்கின்றது.

ஆனால் வரட்சிக் காலத்தில் நீரின் முக்கியத்துவம் உணரப்படுகின்ற அளவுக்கு மழைவீழ்ச்சிக் காலத்தில் உணரப்படுவதில்லை. இதன் விளைவாகவே இந்நாட்டுக்கு கிடைக்கப் பெறுகின்ற மழை நீரில் பெரும் பகுதி எவ்விதத்திலும் பயன்படுத்தப்படாத நிலையில் கடலில் கலக்கின்றது. இது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் பராக்கிரமபாகு மன்னர் குறிப்பிட்டதைப் போன்று 'விண்ணிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரு துளி நீரையும் பயன்படுத்தாது கடலில் கலக்கவிடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் செயற்பட்டால் வரட்சிக் காலநிலைக்கு முகம் கொடுப்பது இலகுவான காரியமாக அமைந்துவிடும்.

ஆகவே வரட்சியின் தன்மையையும் அதன் பாதிப்புக்களையும்; கருத்தில் கொண்டு இனிமேலாவது நாடு பெற்றுக்கொள்ளும் மழை நீரில் ஒரு பகுதியையாவது சேமித்துக் கொள்வதில் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களை நீர்தேக்கிக் கொள்ளக் கூடிய வகையில் புனரமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு மழைக் காலத்தில் கிடைக்கப்பெறும் நீரை சேமித்து முகாமைத்துவப்படுத்தி கொள்ளும் போது வரட்சிக் காலத்தின் தாக்கம் பெரிய பாதிப்பாக அமையாது.