தென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தென்மாகாணத்திற்கான தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகள், பிரயோகப் பரீட்சைகள் நடைபெற்று முடிவடைந்தன நியமனக் கடிதங்கள் எப்போது தான் கிடைக்கப் பெறுமோ என்று ஆவலுடன் காத்திருந்த பட்டதாரிகள் பலரது கனவுகளுக்கு முடிச்சுப் போடும் விதமாகக் கிடைத்தது அந்தச் செய்தி. ஆரம்பக்கல்வி, தமிழ் பாடங்களுக்கு மாத்திரமே அதிகமான பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படுவர் என்பதோடு இன்னும் சில பாடங்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படும் என்பதே இதன் மூலம் தெரிய வந்தது மீண்டும் இன்னொரு பரீட்சையை கூடிய சீக்கிரமே எதிர்பாருங்கள் என்பதே! ( பின்னர் அதுவே உறுதிப்படுத்தப்பட்டது)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த (அ)நீதி தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு மட்டுந்தான் என்பது தான். 2014 ஜனவரி க்குப் பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்நியமனத்தில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன்னொரு அதிசயமும் இடம்பெற்றது வயதில் கூடிய பட்டதாரிகளை அதிகமாக உள்ளீர்க்காமல், இன்னும் பட்டமளிப்பு விழா கூட நிறைவுறாத புதிய பட்டதாரிகளை உள்ளீர்த்தமையாகும். இதன்மூலம் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதை பிழை காண வரவில்லை. அவர்களுக்கு அள்ளாஹ்வினால் நியமித்த நேரம் வர, அவர்களுக்குரியது கிட்டி விட்டது. ஆனால், வருடக்கணக்கில் காத்திருந்தவர்களின் நிலை?? இன்று நாதியற்ற நிலையில் இருக்கின்றனர். பலரது சொல்லம்புகள் அவர்களைப் பதம் பார்த்து வருகின்றன இதற்கு முன்னரும் கூட தென்மாகாணத்தில் பல தடவைகள் மிகச் சூட்சுமமான முறையில் தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. ( அதற்கு வழக்கை காரணம் காட்டி மறுத்தது வேறு கதை) தட்டிக் கேட்க நாதியற்றவர்களா நாங்கள் என்று தம்மைத் தாமே கேள்வி கேட்கும் துர்ப்பாக்கியமான நிலை தான் இன்று தென்மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது!ஏனைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமைக்கான காரணமாக வெற்றிடங்கள் எதுவும் காணப்படவில்லையென்று தக்ஷினபாயவினால் காரணம் கூறப்பட்டது. (தென்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை எவ்வாறு கணக்கெடுக்கின்றார்கள் என்பது தக்ஷினபாயவில் உள்ள அதிகாரிகளுக்குத் தான் வெளிச்சம்.)

கடந்த 15ம் திகதி நடைபெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் விழாவில் கருத்துத் தெரிவிக்கையில், " தென்மாகாணத்தில் இருப்பவர்கள் வழக்குத் தொடுப்பதில் மிகவும் திறமைசாலிகள்! தென்மாகாண சபைக்கெதிரான எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் தென்மாகாண மாணவர்களுக்கு பாரிய அநியாயம் நிகழ்ந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் இனிமேல் இடம்பெறலாகாது. நான் பட்டதாரிகளுக்கு இந்நியமனத்தை வழங்கியதன் மூலம் அவ்வராலாற்றுத் தவறை நிவர்த்திக்க முயற்சி செய்துள்ளேன்" என்று கூறினார். கனம் ஆளுநர் அவர்களே! அவ்வரலாற்றுத் தவறு நீங்கள் நினைப்பது போல் சரிசெய்யப்பட வேண்டுமென்றால், அனைத்துப் பட்டதாரிகளையும் நீங்கள் உள்ளீர்த்திருக்க வேண்டும். குறைந்தது, வயதில் கூடிய பட்டதாரிகளுக்காகவது நீங்கள் நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அப்போது நீங்கள் கூறிய அவ்வரலாற்றுத் தவறு ஓரளவாவது சீர்பெற்றிருக்கும்

கொஞ்சம் கூட நியாயமற்றதாக தோன்றுகின்ற இந்த நியமனம் தொடர்பில் சரியான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அரச அதிகாரிகளை அணுகி இது பற்றி வினவிய போது அவர்கள் கூறியது என்னமோ இப்படித் தான்,

"அய்தான் பாருங்களே, ஒருத்தரும் இதப் பத்தி பெய்த்து பேசுறாங்க இல்லையே. பிரின்ஸிபால்மார்ட செல்லி பெய்த்து பேசுங்களே! இல்லாட்டி நீங்க ஊராக்கள் பெய்த்து பேசுங்களே! இப்ப bomb blast க்குப் பொறகு எங்களுக்கு தென ஒண்டு இல்லே ஒபீஸ்ல...

"அட, பேச வேண்டிய ஆளே நீங்க தானே, நீங்களே இப்படி மத்தவன் மேல பொறுப்ப தள்ளி விட்டுட்டு இருந்தா செரியா?" என்று மனசு கேட்க நினைத்தாலும் தத்தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள தான் இவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளாமல் இல்லை! என்ன இருந்தாலும் அவனவனுக்கு அவனவன் ஜாப் முக்கியமில்லையா? 20ந் தேதிக்கு சம்பளக் கவர் கிடைச்சாத் தானே குடும்பத்துக்கே சோறு! அவங்க சொல்றதும் வாஸ்தவந்தானே!

அரசியல் சப்போர்ட் இல்லாமல் இவற்றிற்கு எதிராக போராடுவதென்பது மிக மிகக் கஷ்டந்தான் என்பது தான் அநேகருடைய கருத்தாகவும் இருக்கின்றது! அது ஒருவகையில் உண்மையும் தான். சிலவேளைகளில் அவ்வதிகாரங்களும் சாத்தியமற்றவை தான். தேர்தல் காலங்களில் களத்திலிறங்குகின்ற நம் வேட்பாளர்களும் செல்லாக்காசுகளாகி விடுகின்றனர். நாம் தட்டிக் கேட்கவோ, உரிமைகளை வென்றெடுக்கவோ நாதியற்றவர்கள் தான்.

இந்நிலையில் நியமனம் கிடைக்கப் பெறாத அத்தனை பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். இன்னும் ஒன்றரை மாதங்களில் நான் அவர்களுக்கு நியமனம் வழங்குவேன் என கடந்த மாதம் 15ம் திகதி நடைபெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் ஆளுநர் வாக்களித்தார். அதற்கொப்ப, நேற்றைய தினம் (2019.07.13) பரீட்சை நடைபெற்றது.

உண்மையிலேயே, அந்தப் பரீட்சைக்குரிய வினாக்களைப் பார்க்கையில், அது பட்டதாரிகளை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா? தோற்றாமலிருப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா என்ற சந்தேகத்தையே தோற்றுவித்தது. ஏனெனில், அந்தளவுக்கு வினாப்பத்திரத்தின் அமைப்பு அமைந்திருந்து.

1.பந்தி பந்தியாக அமைந்திருந்த வினாக்களை வாசித்து விடை எழுதுவதற்குரிய கால அவகாசம் போதாமலிருந்தமை.

2. மொழிபெயர்ப்புக் குளறுபடி

இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் எல்லோருக்குமே நியமனம் கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லையாம். யார் அதிகூடிய புள்ளிகளைப் பெறுகின்றார்களோ, அவர்களுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படும் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.( பாடங்களுக்கான ரீதியில் என்றில்லாமல் பொதுவாக பரீட்சையில் சித்தியடைந்த அத்தனை பேருக்கும் நியமனம் வழ்ங்கப்படும் என்று ஒரு தகவலும் கசிந்தது. ஆனால், அத்தகவல் எவ்வளவு தூரம் உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.)

பரீட்சை நிறைவடைய, ஒரு ஆசிரியனாக தன் கனவை எட்டிவிடலாம் என தவிப்புடன் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இப்பரீட்சை நியாயம் செய்யவில்லை.

ஆக, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த தீர்வொன்றைப பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.

Shazna Nazim

0 Comments:

Post a Comment