மக்களை குழப்புகின்ற கேள்வி


இலங்கையின் தேசிய அரசியல் களம் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆனாலும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. பிரதான தேசியக் கட்சிகளில் சில ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னும் சில கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் ஊவா மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவுற்று பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும், இன்னும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளன.

'மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படாதிருப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலென ஜனாதிபதி ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதோடு மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவுள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மாகாண சபைகளுக்கான தேர்தலை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர முன்னர் நடத்தமுடியுமா என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் வினவி ஜனாதிபதி 'பொருள் கோடல் மனுவொன்றை (Refrence of Application – ஆற்றுப்படுத்துகை விண்ணப்பம்) அரசியலமைப்பின் 129(1) ஷரத்தின் பிரகாரம் சமர்ப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி முழுமையான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடாத்தப்பட்டு இம் மாதம் 30ஆம் திகதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது.

இதேவேளை, சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 'சட்டத்திற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல் தான் முதலில் நடாத்தப்பட வேண்டும். அதற்குத் தேர்தல் ஆணைக்குழு தயாராகவுள்ளது. அதேநேரம் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புக்கு தயாராக வேண்டும். அதுவரையில் ஜனாதிபதித் தேர்தல்தான் நடத்தப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவும் நாம் தயாராகவுள்ளோம். அதேபோன்று பொதுத் தேர்தல் நடத்தவும் தயாராகவே இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையாளரின் இந்த அறிவிப்பும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி போன்ற தேசியக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாயின் அத்தேர்தல் முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். அதனைத் தவிர்ப்பதற்காகவே பிரதான தேசிய அரசியல் கட்சிகள் சில ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடாத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் கூட்டணிகளை அமைப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டுகின்றன.

அந்தடிப்படையில் ஐ.தே.க தம்முடன் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் சந்திப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இந்தச் சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இம்மாத இறுதிக்குள் ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அமைக்கப்படும்' என்றும் 'அதனைத் தொடர்ந்து இம்முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகர் அறிவிக்கப்படுவார்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஐ.தே.க. பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச பதுளையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு 'ஐ.தே.கவின் ஜனாதிபதி அபேட்சகர் தானேயென்றும், தான் இத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியென்றும் அறிவித்திருக்கிறார்.

இவை இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11 ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது அபேட்சகரை அறிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்தும் பொதுக்கூட்டத்தில் தங்களது ஜனாதிபதி அபேட்சகரை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கையின் அரசியல் களம் தேர்தல்களை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால் இவ்வருட இறுதிக்குள் நிச்சயம் தேர்தல் நடாத்தப்படும். ஆனால் அது- எந்தத் தேர்தல் என்பதுதான் தற்போது மக்களை குடைந்தெடுக்கும் வினாவாக உள்ளது. அதற்கான பதிலை அடுத்துவரும் சில தினங்களில் தெரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து நாட்டு மக்கள் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளும் கூட அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

0 Comments:

Post a Comment