4 மாதத்திற்கான இடைக்கால கணக்கு: அரச ஊழியர்கள் உட்பட மக்களுக்கு நிவாரணங்கள்


எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பினூடாக அரசாங்க ஊழியர்கள் உட்பட மக்களுக்கான பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட இருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான முதல் 4 மாதங்களுக்கு இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதற்கிணங்க மீண்டுவரும் செலவினம் மற்றும் நிதிச் செலவுக்காக 1,470 பில்லியன் ரூபாவும், முற்கொடுப்பனவு கணக்கறிக்கைக்காக மேலும் 5 பில்லியனும் செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டது.இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள நிதி அமைச்சு,

அரசாங்க உழியர்களுக்கு அனர்த்த கடன் மட்டம் 250,000 இலிருந்து 350,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வட்டி 4.2 வீதத்திலிருந்து 3 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் அலுவலர்களுக்கு மிதிவண்டி கொள்வளவு செய்வதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா நிதி 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டு அதற்கான வட்டி 4.2 வீதத்திலிருந்து 3 விதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அலுவலக சேவை ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடைக்காக வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.தேசிய காப்பறுதி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஊழியர்கள் 3 வருடத்துக்கு ஒரு முறை பெற்றுக்கொண்ட 5 ரூபா மூக்குக் கண்ணாடி பெறுவதற்கான கொடுப்பனவு 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அரச சேவையின் சாரதிகள், முகாமைத்துவ அதிகாரிகளுக்காக வருடாந்தம் ஆகக் குறைந்தது ஐந்து நாட்கள் கட்டாயப்பயிற்சி வழங்குவதற்கு வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். கிராம சேவை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளில் மாநகரசபை மற்றும் நகர சபை பிரதேசங்களில் அலுவலகக் கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதே வேளை பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் 1000 ரூபா இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். போக்குவரத்து செலவு 200 ரூபவிலிருந்து 6000 ரூபவாகவும் உத்தியோகப் பிரதேசத்துக்கு வெளியே அது 500 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அத்துடன் வருடாந்தம் காகிதாகிகளுக்கான கொடுப்பனவு 1000 ரூபாவிலிருந்து 1500ரூபவாக அதிகரிக்கப்படும். உத்தியோகபூர்வ கொடுப்பனவும் 4500 ரூபாவாக அதிகரிக்கப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை இணைத்து பொதுக்கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

20 வருடங்களுக்குப் பின்னர் படையினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அங்கவீனர்களான படையினருக்கு வாழ்நாள் முழுவதும் முழுமையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளுக்கான சம்பளம் 23.8 வீதம் அதிகரிக்கப்பட்டு 14 நாட்கள் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 நாட்களுக்கென கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. (ஸ)

0 Comments:

Post a Comment