எதிர்காலத்தில் மூளப்போவது நீருக்கான போர்!

உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல.

உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை.

என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன.

பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அளவுக்கு சூழல் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.சூழலில் உள்ள மரம், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு வெறுமையான சூழலுக்குள் மனிதர்கள் விரும்பியே விழுந்து கொண்டுள்ளனர். அதன் பிற்பாடு ஏற்படுகின்ற சூழிலியல் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

காடுகளை அழித்து வீடுகளை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு, சூழல் தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது. காடுகளில் வாழ்கின்ற விலங்குகள், ஊர்வன வீடுகளைத் தேடி வரத் தொடங்கின. யானைகள் வெகுவாக உயிர் இழப்புகளுக்கு ஆளாகின. இதனால் காடுகளின் பரப்பு குறையத் தொடங்கிற்று.

இந்த சூழலின் சமநிலைப் பாதிப்பு பற்றி எவரும் சிந்திக்கத் தயாரில்லை. தாம் வாழ்கின்ற சூழலே இவ்வாறெனில், தமது சந்ததிகளுக்கு எதனை விட்டுவிட்டு செல்லப் போகின்றோம் என்றும் மனிதன் நினைப்பதாயில்லை.





விடயம் இவ்வாறிருக்க, நீருக்கான கேள்வியும் அதனை விட பல்மடங்காகியுள்ளது. முன்னொரு காலத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறு என வழிகளிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை மிகச் சுலபமாக, இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் சூழலை துவம்சம் செய்து நீர்நிலைகளை அழித்து வாழ்விடங்களை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு இன்று பணம் கொடுத்து நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு தேசத்தில் வரட்சி நிலவுவதற்குக் காரணம் அங்குள்ள இயற்கைச் சமநிலையில் ஏற்படுகின்ற மாற்றமே. இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த எழில்மிகு தேசம். அவ்வாறிருக்ைகயில் வரட்சி எங்கிருந்து வந்தது? எப்போது காடுகளை அழிக்க முற்பட்டனரோ அன்றே வரட்சி வாட்டி வதைக்கத் தொடங்கிற்று. காடுகளில் உள்ள குளங்கள், ஏரிகளும் சேர்த்தே நாசம் செய்யப்பட்டன.

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத்தான் மற்ற உபயோகங்களுக்கான தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை மக்கள் பயன்படுத்தினார்கள். இது 1980இல் 45சதவீதமாகவும், 1990இல் 65சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை மொத்த நீரில் 80சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது.

நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள்தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள்,இரசாயனப் பொருட்கள், எண்ணெய்ப் பதார்த்தங்கள்,வர்ணங்கள் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கைத் தன்மையே மாறுகிறது. வீட்டுக் கழிவறைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது.

இன்றைய காலத்தில் பணம் இருந்தும் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத சிக்கல் நிலை உள்ளது. பூமி 71சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த நீரில் உப்பு நீரே அதிகம். 2.5சதவீதம் நீர் மட்டுமே நன்னீர். உலகில், 0.08சதவீதத்துக்கும் குறைவான நன்னீரை மட்டுமே மனிதனால் பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50நாடுகளை 1999இல் ஐ.நா அறிவித்தது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. நீரைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரினதும் கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த நாடுகள் முன்வர வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம், நீர்த்தெளிப்பு போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்கும் திட்டங்கள் கிராம மட்டங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்படுதல் அவசியம்.

0 Comments:

Post a Comment