தன்னை பற்றி சிந்திக்க வேண்டிய 'மனிதன்'

அண்டசராசரங்கள் அத்தனையையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருப்பவன் தான் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ். அவனது படைப்புக்களில் மலக்கு, ஜின், மனிதன் ஆகியன மிக முக்கியமானவை. அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தும் அவனை வணங்கி வழிபடுவதற்காகவும் புகழ்ந்து துதிப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளன. அந்தடிப்படையில் அனைத்து படைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை ஸுஜுது செய்த நிலையில் வணங்கி புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஜின்களும், மனிதனும் அல்லாஹ் வை வணங்கி வழிப்பட வேண்டியவர்கள். இதனை அல்லாஹ் தெளிவாகக் கூறி வைத்திருக்கின்றான்.

'ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்காகவன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை'.

(அல் குர்அன் 51:56)

இதன்படி ஜின்களும் மலக்குகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மிகவும் தெளிவானது. அல்லாஹ்வின் அந்த நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டியது இப்படைப்புக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்த படைப்புக்களில் மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை நெருப்பினாலும், மனிதனை மண்ணினாலும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். அதேநேரம் மனிதனுக்கு ஆறு கட்டங்களைக் கொண்ட வாழ்வொழுங்கையும் அவன் வழங்கியுள்ளான்.

அதாவது
1. ஆலமுல் அர்வாஹ்
2. தாயின் வயிறு
3. உலக வாழ்வு
4. கப்று வாழ்வு
5. மஹ்ஷர் மைதானம்
6. சுவர்க்கம் அல்லது நரகம்.

இவற்றில் உலக வாழ்வு கட்டம் மிகவும் முக்கியமானதும் பெறுமதி மிக்கதுமாகும். இது கெட்டியான உடலமைப்பையும் பகுத்தறிவையும், சுய தெரிவு சுதந்திரத்தையும் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள வாழ்வுக்கட்டமாகும். அதேநரம் இந்த உலக வாழ்வு கட்டத்தின் போது மலக்குகளையோ ஜின்களையோ மனிதனால் பார்க்கவோ தொட்டுணரவோ முடியாது. ஆனால் மலக்குகளும் ஜின்களும் மனிதனை பார்ப்பர்.

மேலும் அல்லாஹ்தஆலா தன் கரங்களால் படைத்த இம்மனிதனை மிகவும் அழகாகப் படைத்துள்ளான். இதனை அவன் தன் அருள்மறையாம் அல்குர்ஆனில், 'அத்தியின் மீதும், சைத்தூன் மீதும், அபயமளிக்கும் நகர் மீதும் சத்தியம் செய்து நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.' (அல் குர்ஆன் 95: 01 -– 04) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம் அல்லாஹ் மனிதனுக்கு நீண்ட நெடியதொரு வாழ்வுக்கட்டத்தை வழங்கியுள்ளான். அது தனியே உலக வாழ்வு கட்டத்தோடு மாத்திரம் முற்றுப்பெறுவதுமல்ல. வரையறுக்கப்பட்டதுமல்ல. ஆனால் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள நீண்ட வாழ்வில் உலக வாழ்வு கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்வு கட்டம் தவிர்ந்த வேறு எந்த வாழ்வுக்கட்டங்களிலும் பகுத்தறிவோ, தெரிவுச் சுதந்திரமோ, சுய இயங்குநிலையோ மனிதனுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இந்த உலக வாழ்வு கட்டத்தை மனிதன் உரிய முறைப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நேரான பாதையில் தாம் படைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தை நோக்கி அவனால் பயணிக்க முடியும்.

இருப்பினும் தன் படைப்புக்களில் ஒன்றான மனிதனைப் பற்றியும் அல்லாஹ் நன்கறிந்தவனாவான். அதனால் அவன் மனிதனின் விமோசனத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கரையும் கருணையும் இரக்கமும் கொண்டிருக்கின்றான். அதனால் உலகில் மனிதன் வாழத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பூமியையே அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இதனை அவன் தன் அருள்மறையில், 'அவன் தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். (அல் குர்ஆன் 02:29) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம், 'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களையும் ஏற்படுத்தினோம். (அல் குர்ஆன் 07:10) என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றான்.

அத்தோடு முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் காலத்திற்கு காலம் மனிதர்களில் இருந்து இறைத்தூதுவர்களை தெரிவு செய்து அவர்கள் ஊடாக மனிதனுக்குரிய நேர்வழிகாட்டல்களை உலகிற்கு அருளி அவன் வழிகாட்டி வந்தான். ஆனபோதிலும் ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் நடைமுறையில் இருந்து வந்த இந்நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழிகாட்டக்கூடிய அல் குர்அனை பிரதான மூலாதாரமாகக் கொண்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி அவன் நடைமுறைப்படுத்தி காட்டி வைத்திருக்கின்றான். அது உலகம் இருக்கும் வரையும் எல்லா கால, இட சூழலுக்கும் ஏற்ற வகையிலான உயிரோட்டம் மிக்க வாழ்க்கை நெறியாகவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே நேர்வழிகாட்டலாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு தன் படைப்பான மனிதனின் சுபீட்சம் விமோசனத்திற்காக ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஆதம் (அலை) அவர்களது அனைத்து சந்ததிகளதும் ஆன்மாகளையும் ஆலமுல் அர்வாஹ்வில் ஒன்று திரட்டினான். அங்கு, 'நான் உங்களது ரப் இல்லையா? என அல்லாஹ் வினவ 'ஏன் இல்லாமல் நீ தான் எங்கள் ரப்' என அவர்கள் கூற அவர்களையே (மனிதர்களை) சாட்சிகளாக ஆக்கி வைத்திருக்கின்றான்.

இதனை அவன் தன் அருள்மறையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

'நபியே..! உங்கள் இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று கேட்டத்திற்கு ஏன் இல்லை. நீ தான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம் என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டு பராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், (அல் குர்ஆன் 7:172)

இவ்வசனத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் தபரி (ரஹ்) அவர்கள் ஜுவைபிர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாவது, 'ளஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்) அவர்களது ஆறு நாள் மகன் இறந்துவிட்டார். அப்போது அவர் என்னிடம் ஜாபிரே..! என் மகனை அவரது குழியில் (கப்றில்) வைக்கும் போது அவரது முகத்தைத் திறந்து வையுங்கள். அவரது முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள். ஏனெனில் அவர் உட்கார வைக்கப்பட்டு கேட்கப்படுவார் என்று கூறினார்கள். நான் அவர் சொன்னபடியே செய்தேன்.

அடக்கம் முடிந்த பின்னர் அவரிடம் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக..! உங்கள் மகனிடம் எதைக் குறித்து கேட்கப்படும். அவரிடம் யார் கேள்வி கேட்பார்? என வினவினேன். அதற்கு அவர் ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி குறித்து கேட்கப்படும் என்று கூறினார்கள். அப்போது நான் அபுல் ஹாசிம் அவர்களே..! ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி எது? என வினவினேன். (அடுத்த வாரம் நிறைவுறும்)

0 Comments:

Post a Comment