மீண்டும் தலைதூக்கும் டெங்கு!


நாட்டின் சில பிரதேசங்களில் தற்போது டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இதனை அவ்வப்பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருகை தரும் காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம் இந்நாட்டில் இந்நோய்க்கு உள்ளானோரதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துக் காணப்படுவதாக தொற்றுநோய்கள் பரவுதல் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, கடந்த வருடம் 51,169 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகினர். அவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையும் 56,833 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதோடு, 72 பேர் உயிரிழந்துமுள்ளனர். இதன்படி இந்நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் அதிகரித்திருப்பது தெளிவாகின்றது.

அதேநேரம் இவ்வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்கிடையில் இந்நோய்க்கு இவ்வளவு தொகையினர் இப்போதே உள்ளாகியிருப்பதும் உயிரிழந்திருப்பதும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், கடந்த சில வாரங்களாக தொடராக மழை பெய்து வருவதோடு நாட்டின் பல பிரதேசங்களின் தாழ்நிலங்களிலும் வெள்ள நி​ைலமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டெங்கு நோயைக் காவும் நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பெருமளவிலான நீர் தேவைப்படுவதில்லை. மாறாக, வீட்டிலும் சுற்றாடலிலும் காணப்படுகின்ற அப்புறப்படுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பொலித்தீன் உறைகள் போன்ற பொருட்களில் தேங்கும் சொற்பளவு தெளிந்த நீரே போதுமானது.

அதன் காரணத்தினால் வீட்டிலும் சுற்றாடலிலும் மழைநீர் அடங்கலான தெளிந்தநீர் தேங்கக் கூடிய வகையில் எவ்வித பொருட்களும் காணப்படாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென தொற்றுநோய் பரவுவதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மழைநீர் தேங்கி நுளம்புகள் பெருகுவதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டெங்கு நோயானது, தனியே சுகாதாரப் பிரச்சினை அல்ல. அது சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினையும் கூட. இதனை தனியே மருத்துவர்களால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக பொதுமக்களதும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

அந்தவகையில், இந்நோய்க்கு கடந்த வருடம் உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்ட போதிலும், அவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களில் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இவ்வருடம் ஏப்ரல் மாதம் தவிர்ந்த ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

அதேநேரம் தற்போது தொடராகவும் அடிக்கடியும் மழை பெய்து வருவதானது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்துக்கும் டெங்கு நோய் மேலும் பரப்புவதற்கும் வாய்ப்பாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், சொப்பிங், பொலித்தீன் உள்ளிட்ட சகல திண்மக் கழிவுப் பொருட்களையும் தெளிந்தநீர் தேங்க முடியாதபடி அப்புறப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு குடிமகனும் விசேட கவனம் செலுத்தவேண்டும். அதனை ஒரு சமூகப் பொறுப்பாக கருதி செயற்படுவது அவசியமானது. அப்போது டெங்கு நுளம்புகள் பெருக முடியாத நிலைமை ஏற்படுவதோடு அது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றுகின்ற நன்மையாகவும் அமையும்.

மேலும் இக்காலப் பகுதியில் எவருக்காவது காய்ச்சல், தலையிடி, உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்நோய்க்கு உள்ளானவர்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கும் போது இந்நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு டெங்கானது முழுமையாக தவிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு நோய் என்பதையும் மறந்து விட முடியாது.

ஆனால், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையாகவும் நடந்து கொள்வது நோய் தீவிரமடையவும், உயிராபத்துக்கு முகங்கொடுக்கவும் வழிவகுக்க முடியும். அதுவே மருத்துவர்களது அபிப்பிராயமாக உள்ளது.

ஆகவே, நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையிலான காலநிலை தற்போது நிலவி வருவதால் வீட்டையும் சுற்றாடலையும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்காதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதனை ஒரு பொறுப்பாகவும் கருதி செயற்படுவது அவசியம். அப்போது டெங்கு நோய் ஒரு அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ இருக்காது என்பது திண்ணம்.

0 Comments:

Post a Comment