10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.

0 Comments:

Post a Comment