50 முட்டைகளை உட்கொள்வதாக பந்தயம் கட்டியவருக்கு நேர்ந்த சோகம்!

உத்திர பிரதேசத்தில் 50 முட்டைகளை உட்கொள்வதற்காகப் பந்தயம் கட்டிய ஒருவர், 41ஆவது முட்டை உட்கொள்ளும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான சுபாஷ் யாதவ் என்பவர் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று அவரும், அவரது நண்பர் ஒருவரும் பிபிகஞ்ச் சந்தை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உட்கொள்ளச் சென்ற போது அவர்கள் இருவரும் முட்டை உட்கொண்ட போது அவர்களுக்குள் திடீரென முட்டை உட்கொள்வது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 50 முட்டை உட்கொள்ள முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார்.அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 50 முட்டைகளை உட்கொண்டால் பரிசாக எவ்வளவு பணம் தருவாய் என்று கேட்டார்.

அதற்கு அவரது நண்பர் ஒரே நேரத்தில் இப்போதே 50 முட்டை உட்கொண்டு விட்டால் 2 ஆயிரம் ரூபா பரிசு தருவதாகத் தெரிவித்தார்.இதையடுத்து இந்த சவாலை சுபாஷ் ஏற்றுக்கொண்டு 50 முட்டைகளைக் கொண்டு வரும்படி கூறினார். 50 அவித்த முட்டைகள் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக சுபாஷ் உட்கொள் ஆரம்பித்தார்.40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து உட்கொண்டு தனது நண்பரை மிரள வைத்தார்.

ஆனால் 41ஆவது முட்டையை உண்ண ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41ஆவது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அவரை அந்த பகுதியிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கிருந்த வைத்தியர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி வைத்திய அறிவியல் கழகம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அதன்படி அந்த வைத்தியசாலைக்கு சுபாஷ் யாதவை கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து வைத்தியர்கள், தெரிவிக்கையில், “முட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டமையால், அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது.

இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்” என்றனர்.குறித்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் பொலிஸில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.