இரண்டு நாள் மோதலுக்குப் பின் காசாவில் யுத்த நிறுத்தம் அமுல்


34 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேலுடனான எகிப்து மத்தியஸ்தத்திலான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியதாக காசாவின் இஸ்லாமிய
ஜிஹாத் போராட்ட அமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதல்களில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்லாமிய ஜிஹாத் பேச்சாளர் முசாப் அல் பிரைம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார். இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேரம் நீடித்த உக்கிர மோதலுக்குப் பின்னரே இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு சிறிது நேரம் அமைதி நிலவிய நிலையில், எதிர்பாராத சமயத்தில் பலஸ்தீனத்தை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதுடன், இஸ்லாமிய ஜிஹாத் நிலைகளின் மீது விமான தாக்குதல்களையும் நடத்தியது.

அபூ மல்ஹுஸ் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் உட்பட இரண்டு நாட்களாக இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், பலஸ்தீனத்தின் தாக்குதலில் காயமடைந்த 63 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றுகையில் இருக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் இரண்டு நாட்களாக இடைவிடாது வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது குண்டுகளை வீசிவந்த நிலையில் அதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எகிப்தின் உயர் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்த யுத்த நிறுத்தத்தில் பலஸ்தீனர்கள் சார்பில் இஸ்லாமிய ஜிஹாத்தின் நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பில் பேச்சாளர் பரிம் குறிப்பிட்டார்.

“படுகொலைகளை நிறுத்துவதற்கும், குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது மற்றும் முற்றுகையை தளர்த்தும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன” என்று பரிம் தெரிவித்தார்.

காசாவில் இரண்டு நாட்களாக நீடித்த மோதல்கள் முடிவுக்கு வருகிறது என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அவிசாய் அட்ராயீ தெரிவித்துள்ளார்.

எனினும் பலஸ்தீன போராளிகள் பேணும் வரை எளிமையான யுத்த நிறுத்தம் கடைப்பிக்கப்படும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. “அமைதிக்கு அமைதியால் பதில் அளிக்கப்படு” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் பரந்த அளவில் கொள்கை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு அவர் குறிப்பிட்டார்.

“இஸ்ரேலின் இலக்குவைத்து நடத்தப்பட்டும் கொலைகள் நிறுத்தப்படமாட்டாது, (காசா எல்லையில்) பதில் நடவடிக்கையாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்தத்தை அடுத்து காசாவில் அமைதி நிலவியதோடு அங்கிருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் குண்டு வீச்சுகள் நிறுத்தப்பட்டிருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று அதிகாலை இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன குடும்பம் ஒன்றின் ஆறு பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் உள்ள இந்த குடும்பத்தின் தலைவர் பலஸ்தீன ரொக்கெட் குண்டு வீசும் தளபதிகளில் ஒருவர் என்று இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் நீடித்த மோதல்களில் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி 400க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிடுகிறது. மறுபுறம் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியதாக அந்த இராணுவம் குறிப்பிட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதி பஹா அபூ அல் அத்தா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி அவரை கொன்ற நிலையிலேயே இந்த மோதல் வெடித்தது.

காசாவில் இடம்பெறும் ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் பல தாக்குதல் திட்டங்களுக்கு அவர் பொறுப்பானவர் என்று இஸ்ரேல் குறிப்பிட்டது.

முன்னதாக, காசா நகரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கம் இந்த சண்டையில் இணைவது குறித்து எவ்வித சமிக்ஞையும் வெளியிடவில்லை. அவ்வாறான ஒரு நிலை காசாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியது.

அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே, இஸ்ரேல் ஹமாஸை விடுத்து, இஸ்லாமிய ஜிஹாதை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலுக்கும் ஹமாஸ் அமைப்பை குற்றம்சாட்டுவதையே வழக்கமாக கொண்ட இஸ்ரேல், முதல் முறையாக தற்போது பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாதை குறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.