பாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் டெஸ்டில் பங்கேற்கும் இலங்கை


நீண்டதொரு சர்ச்சைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரில் விளையாடுவதற்கு
சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, மீண்டும் அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி சுமார் 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணிற்கு சென்று இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமையவுள்ளது.

அண்மையில் ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

நான்கு வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் முழுமையான ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தொடரில், இலங்கை அணியின் பல முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்ட, ஒருநாள் தொடருக்கு லஹிரு திரிமான்னவும், ரி-20 அணிக்கு தசுன் ஷானக்கவும் தலைமை தாங்கினர். இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி, 2--0 என கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இலங்கை அணி, முழுமையாக கைப்பற்றியது.





இந்த சுற்றுப்பயணத்தின் போது சில சர்ச்சையான விடயங்களும் இடம்பெற்றிருந்து. குறிப்பாக சுற்றுப்பயணத்தின்போது இலங்கை வீரர்களின் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கருத்து நிலவியது. தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது போன்ற உறுதி மொழியையும் பாகிஸ்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடி, வீரர்களுக்கு பணப்பரிசினையும் வழங்கியது.

இதன்பிறகு, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-2-0 போட்டியில் விளையாடியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

இவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும், பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள், அங்கு சென்று விளையாட, தொடர்ந்தும் தயக்கம் காட்டின.

உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது பாகிஸ்தான் சென்று, இலங்கை அணி விளையாடவுள்ளது.

எந்த அணி பாகிஸ்தான் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினோர்களோ, அதே அணி தற்போது துணிச்சலுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதனை, பலரும் பாராட்டியுள்ளனர்.