முகத்தை மூடி வர தடையில்லை; வாக்களிக்க முகம் காட்ட வேண்டும்தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்ளவர்களாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால் வாக்களிப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முகத்தை திறந்து அடையாளப்படுத்தினால் போதுமானது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (9) காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, வாக்களிக்கவுள்ள வாக்குச் சீட்டு வழமையை விட அளவில் பெரியதாக இருப்பதால் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்களை நன்றாக கவனித்து, வாக்களிக்க தீர்மானித்துள்ள வேட்பாளர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை தீர்மானம் எடுத்துக்கொண்டால் வாக்களிக்கும் போது நேர விரயம் மற்றும் வீண் சிரமங்களை தவிர்க்க முடியும்.

அத்தோடு தேர்தல் காலத்தில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிரிவினைகள், முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வதும், தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே வேட்பாளர்கள் அல்லது அவர் சார்ந்தவர்கள் முடிவு என்ற பெயரில் அறிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.