பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.