சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் முற்றாக தீரும் :முதித்த பீரிஸ்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரு தினங்களில் முற்றாக நீங்கிவிடும் என்று கூறிய லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பானர் முதித்த பீரிஸ் நாளை காலை 3650 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு நிலைவரம் தொடர்பில் இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போது இதனை கேசரிக்கு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது

எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை எமது நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இருநாட்களுக்குள் தட்டுப்பாட்டை முழுமையாக நீக்க கூடியதாகவிருக்கும். இந்த நடவடிக்கைகளை நாம் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்திருந்தோம். இந்நிலையில் , கடந்த 3 ஆம் திகதி 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான எரிவாயு வை கொள்வனவு செய்யதிருந்தோம்.

அதேபோல் கடந்த 04 ஆம் திகதி 110 ஆயிம் மெட்ரிக் தொன் எரிவாயுவையும்,5 ஆம் திகதி 80 மெட்ரிக் தொன்னிற்கு அதிகமான எரிவாயுவையும் கொள்வனவு செய்திருந்தோம்.

நேற்று கூட சுமார் 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிக நிறையுடைய எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்திருந்தோம். அதேவேளை நாளையும் , நாளை மறுதினமும் எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

சாதாரணமாக நாளொன்றிற்கு 60 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவினையே விநியோகித்து வந்தோம். ஆயினும்,எரிபொருள் தட்டுப்பாட்டின் நிமித்தம்,ஒருஇலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவினை விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான காரணம்

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 250 ரூபாவால் எரிபொருளின் விலை குறைத்தமை இதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் , எரிவாயுவின்விலை குறைந்தமையினால், மக்கள் அதனை அதிகமாக கொள்வனவு செய்வதில் நாட்டம் செலுத்தினர். அதுவே எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான பிரதான காரணமாகும்.

அதேவேளை , லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஓமானிலிருந்தே தேவையான எரிவாயுவினை கொள்வனவு செய்கின்றது. இந்நிலையில் அந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையும் இந்த தட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளது.

அத்துடன், எரிவாயுவை கொண்டுவரும் கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் கப்பல்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதேவேளை , நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அன்றாடம் விறகு அடுப்பை பாவிக்கும் பாவனையாளர்கள் , எரிவாயுவை கொள்வனவு செய்ய முன்வந்தமையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதகமான காரணிகளாக மாறியுள்ளன.

எரிபொருளின் விலை குறைவடைந்ததை அடுத்து எமது போட்டி நிறுவனங்கள் சில தமது களஞ்சியத்தில் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே,அவர்களுடைய வாடிக்கையாளர்களுடைய தேவையையும் தேசிய விநியோகஸ்தர்கள் என்ற வகையில் எமது நிறுவனத்தினூடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான காரணிகளினால் எரிபொருள் தட்டுப்பாட்டினை ஈடு செய்ய முடியாத நிலைமை எமக்கு எற்பட்டது. ஆகவே ,தான் இவ்வாறானதொரு நிலைமைஏற்பட்டது.

எமது விநியோகஸ்தர்கள் அவ்வாறு பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என கூறமுடியாது. ஏனெனில் அத்தகைய முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கவில்லை.

அதேவேளை,எமது விநியோகஸ்தர்கள் நம்பகரமான விநியோக நடவடிக்கையினையே இந்த தட்டுப்பாடான காலகட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.