அனுராதபுரம் புனித பூமியில் இன்று பதிவியேற்கும் கோத்தாபய ராஜபக்ஷ

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்
ஷ இன்றைய தினம் காலை 11.00 மணிக்கு ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் உள்ள புனித பூமியில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமோக வெற்றி யீட்டி நாட்டின் 7ஆவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

அதன்படி வெற்றிக்கு தேவையான 50 வீதத்தை கடந்த கோத்தபாய அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 52.25 வீதமான வாக்குகளை பெற்று நாட்டின் 7ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்

அதேவேளை கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்த்து புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். சஜித் பிரேமதாசவை விட கோத்தபாய ராஜபக்ஷ 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகளை மேலதிகமாக பெற்று வெற்றியீட்டியிருக்கின்றார். சஜித் பிரேமதாச 41.99 வீதமான வாக்குகளையே இந்த தேர்தலில் பெற்றிருக்கின்றார்.

மேலும் மூன்றாவது பெரும் சக்தியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 418553 வாக்குகளைப் பெற்று 3.16 வீதத்துடன் 3ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார்.

முன்னாள் இராணுவத்தின் தளபதி மகேஷ் சேனநாயக்க இந்த தேர்தலில் 49655 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 38714 வாக்குளைப் பெற்றிருக்கின்றார்.

மேலும் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச திஸாநாயக்க 34537 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரேயொரு பெண் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய அஜந்தா பெரேரா 27572 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ரொஹான் பல்லேவத்த 25173 வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்.

ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றமையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று பிற்பகல் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

அதனை அடுத்து இன்றைய தினம் காலை 11.00 மணிக்கு கோத்தபாய ராஜாபக்ஷ இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் உள்ள புனித பூமியில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

அதேபோன்று கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் முன்னிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க இருக்கிறார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபகஷ வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட்டங்கள் மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டம் ஆகியன தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பாரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலும் அதிகளவசான வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றியீட்டியிருக்கின்றார். மேல்மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாரிய வாக்கு வித்தியாசத்தில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியிருக்கின்றார்.

சஜித்தின் வீழ்ச்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் தொகுதிகளில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற போதிலும் தென்னிலங்கையில் ஒரு சில தொகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தொகுதிகளிலும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மிக அதிகளவான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். எனவேதான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்குகளைப் பெறுவதில் சரிவை சந்திருந்த போதிலும் தென்னிலங்கையில் கிடைக்கப்பெற்ற அதிகளவான வாக்குகள் கோத்தபாயவை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

மறுபுறம் வடக்கு, கிழக்கில் மிக அதிகளவான வாக்குவித்தியாசத்தில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றிருந்தாலும் கூட தென்னிலங்கையில் அவர் மிக அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 727713 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் சஜித் பிரேமதாச 599927 வாக்குகளை பெற்றிருக்கின்றார். கம்பஹா மாவட்டத்தில் கோத்தபாய 855870 வாக்குகளைப் பெற்ற நிலையில் சஜித் பிரேமதாச 494671 வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். அதேபோன்று களுத்துறை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 482920 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் சஜித் பிரேமதாச 284213 வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்.

தென்மாகாணம்

அத்துடன் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டியிருக்கின்றார். காலி மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 466148 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 217401 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 278804 வாக்குகளைப் கோத்தபாய ராஜபக்ஷவும் 108906 வாக்குகளை சஜித் பிரேமதாசவும் பெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 374451 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 149026 வாக்குகளை பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 448044 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 264563 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 320481 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 228032 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடக்கு, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான முகாம் பாரிய வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை இம்முறை சஜித் பிரேமதாச பெற்றிருக்கின்றார். வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 312722 வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்ஷ 23261 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயேச்சைக் குழுவில் இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 174739 வாக்குகளையும் கோத்தபாய 28105 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கிழக்கு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 238649 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை கோத்தபாய ராஜபக்ஷ 38460 வாக்குகளையே பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 259673 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ 135038 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 166841 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் கோத்தபாய 54135 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வடமத்திய மாகாணம்

வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம், மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய வாக்கு வித்தியாத்தில் வெற்றிபெற்றுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் கோத்தபாய 342223 வாக்குகளையும் பெற்றுள்ளநிலையில் சஜித் பிரேமதாச 202348 வாக்குகளையே பெற்றுள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் கோத்தபாய 147340 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 112473 வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்.

ஊவா மாகாணம்

இது இவ்வாறிருக்க ஊவா மாகாணத்தில் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் கோத்தபாய ராஜபக்ஷ கடும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார். மொனராகலை மாவட்டத்தில் 208814 வாக்குகளை கோத்தபாய தனதாக்கிக்கொண்டுள்ளார். அதேவேளை சஜித் பிரேமதாச 92539 வாக்குகளையே பெற்றுள்ளார். பதுளை மாவட்டத்தில் கோத்தபாய 276211 வாக்குகளைப் பெற்றுள்ள சூழலில் சஜித் பிரேமதாச 251706 வாக்குகளை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

வடமேல் மாகாணம்

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் கோத்தபாய அமோக வெற்றியீட்டிருக்கின்றார். புத்தளம் மாவட்டத்தில் 230760 வாக்குகளை கோத்தபாய பெற்றுள்ளதுடன் சஜித் பிரேமதாச 199356 வாக்குகளையே சுவீகரித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் கோத்தபாய 552258 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் சஜித் 416981 வாக்குகளை பெற்றுள்ளார்.

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தில் மாத்தளை, கண்டி மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள நிலையில் சஜித் பிரேமதாச நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெற்றிருக்கின்றார். மத்திய மாகணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 277913 வாக்குகளைப் பெற்ற நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ 175823 வாக்குகளையும் பெற்றுள்ளார். கண்டி மாவட்டத்தில் கோத்தபாய 471502 வாக்குகளையும் சஜித் 417355 வாக்குகளையும் பெற்றனர். மாத்தளை மாவட்டத்தில் கோத்தபாய 187821 வாக்குகளைப் பெற்றதுடன் சஜித் 134291 வாக்குகளைப்பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் 1 கோடியே 33 இலட்சத்து 87 ஆயிரத்து 951 பேர் வாக்களித்திருந்த நிலையில் 135452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி செல்லுபடியான 13252499 வாக்குகளில் 52.25 வீத வாக்குகளை பெற்ற கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிக்கின்றார்.

தேர்தலில் மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 418553 வாக்குகளையே பெற்றிருக்கின்றார். மொத்த செல்லுபடியான வாக்குகளில் இது 3.16 வீதமாகும்.

நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி விசேட வர்த்தமானி ஊடாக விடுக்கப்பட்டது. அதன்படி ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வேட்புமனுகள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கினர். பிரதானமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் பாரிய போட்டி நிலவியது. இருவரும் நாடளாவியரீதியில் நூற்றுக்கணக்கான பிரசாரக்கூட்டங்களில் பங்கேற்றனர்.

கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு வரை இரண்டு பிரதான வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையிலேயே நேற்று முன்தினம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது. தேர்தலில் 80 வீதத்தை தாண்டி வாக்களிப்பு பதிவாகியது. நேற்று முன்தினமிரவு வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தன. அதன்படி நேற்று பிற்பகல் தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

0 Comments:

Post a Comment