நம் கருமங்கள், எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா


நாங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வகையிலான கருமங்களில ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இறைவணக்க வழிபாடுகளில் கலந்துகொள்கிறோம். எமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் உள்ளிட்ட பலருடன் பேசிப்பழகுகிறோம். அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்கிறோம். இப்படியாக நாம் நாளாந்தம் செய்யும் அலுவல்கள் யாவும் அல்லாஹ்வின் நல்லருளுக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் செய்கின்ற செய்ய முற்படுகின்ற கருமங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா இல்லையா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் தான் நாம் செயல்களில் இறங்க வேண்டும். அல்லாஹ்வின் மேல் அச்சம் நிறைந்தவர்கள் நிச்சயம் இது விஷயமாகக் கவனம் செலுத்துவார்கள்.

நாம் அல்லாஹ்வுக்காக ஐந்துவேளை தொழுது வருகிறோம். எனினும் இவையாவும் உண்மையான இறைபக்தி இல்லாத நிலையில் ஏதோ கடமைக்காக செய்து வரக்கூடாது. அது அர்த்தமில்லாதது. நாம் தொழுகையில் ஈடுபட்ட போதிலும் இதுபோன்ற மற்றும் வணக்க வழிபாடுகளில் கலந்து கொண்ட போதிலும் அவையாவும் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றோம் என்ற பயபக்தி உள்ளத்திலே ஆழமாகப் பதிய வேண்டும்.

உள்ளத்திலே வெளிப்படும் எண்ணங்களை எல்லாம் மறந்து விட்டு அல்லாஹ்வின் அச்சம் கொண்டவர்களாக எமது வணக்க வழிபாடுகளை செயல்படுத்த வேண்டும்.

நாம் செய்கின்ற நல்ல கருமங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மையுண்டு. தீய கருமங்களுக்கு தண்டனையையும் உண்டு என்பதை நாம் நம்புகின்றோம். அதனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான அச்சம் கொண்டவர்கள் பாவங்கள் செய்வதற்கு முற்பட மாட்டார்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய்கூறுவது, பொய் சத்தியம் பண்ணுவது, பிறர் மனதை நோவினை செய்வது பிறர் பொருளை பறிப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, அநாதைகளின் சொத்துக்களை அநீதியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பாவமான காரியங்கள் செய்வதற்கு அல்லாஹ்வின் மீது அச்சம்- பயம் கொண்டவர்கள் கொஞ்சமும் முன்வர மாட்டார்கள்.

ஆனால், இன்று சமூகத்திலே நடப்பதென்ன? இதுவெல்லாம் எமது நீண்ட தூர சிந்தனைக்கு உட்பட்டதாகும். நாம் எவருக்கும் தெரியாமல் அநியாயங்கள் செய்யலாம். மற்றவர்கள் முன் நல்லவர் போல நடித்தும் விடலாம். எனினும் இந்தச் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வுத்தஆலா கவனிக்கின்றான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் நாம் எந்த வேளையிலும் அலலாஹ்வை நினைத்தவர்களாக அவன் மேல் அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒருமுறை கலீபா உமர் பாரூக் அவர்கள் ஒரு முக்கிய அலுவலக குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியிலே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அச்சிறுவனுடன் பேச நினைத்த கலீபா அவர்கள், சிறுவனிடம் வந்தார்கள். குதிரை மீது இருப்பவர் கலீபா உமர் என்பது சிறுவனுக்கு தெரியாது “தம்பி இவை யாருடைய ஆடுகள்; இவை எனது எசமானின் ஆடுகள். ஆடுகளில் ஒன்றை விலைக்குத் தருகிறாயா? இதனை உங்களுக்கு விற்க முடியாது; இவை என்னுடையதல்ல. எனது எசமானுக்குரியது. எனக்கு ஓர் ஆட்டை தந்து விடு. எஜமான் கேட்டால் ஓநாய் பிடித்து விட்டதாக சொல். பெரியவரே, நான் எஜமானரிடம் பொய் கூறி ஏமாற்றலாம். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை ஏமாற்ற முடியாதல்லவா? நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன். இந்தச் சிறுவனிடம் இத்தகைய அல்லாஹ்வின் மீது அச்சம் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். இதுதான் இறையச்சம். எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் இருக்கின்றதல்லவா?

எம். ஏ. அத்தாஸ்
மாத்தறை