11 மாதங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள்; 85 பேர் பலி


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 64,290 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் 11 மாத காலப்பகுதியினுள்ளேயே குறித்த டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் டெங்கு காரணமாக 85 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அது மொத்த டெங்கு நோயாளர்களில் 46.8 வீதமாகும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி உட்பட பல மாவட்டங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே, நுளம்புகள் பெருகுவதை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்களிடம் வைத்தியர் அருண ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.