கற்பதும், கற்பிப்பதும் பர்ளு கிபாய

அறிவு எனும்போது அதனை உலக அறிவு, மார்க்க அறிவு எனும் இரு கூறுகளாக இஸ்லாம் பிரிக்கவில்லை. எமது சமூகத்தவர்கள் 'உலமாக்கள் என்று ஷரீஆ அறிவுகளைக் கற்றவர்களையும், கல்விமான்கள் என்று உலக அறிவுகளை- பொதுக் கல்விகளைக் கற்றவர்களையும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குர்ஆனிலோ, ஹதீஸிலோ இப்படியான பிரிவினையைக் காண முடிவதில்லை.

நபி(ஸல்) அவர்கள், கல்வியை ’பயனுள்ள கல்வி’, ’பயனற்ற கல்வி’ என்று மட்டுமே பிரித்திருக்கிறார்கள். ’அல்லாஹ்வே உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’’(முஸ்லிம்) என்று அவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

மேலும் ஒருவர் மரணித்ததன் பின்னரும் அவருக்குத் தொடர்ந்தும் நன்மையைப் பெற்றுத்தரும் அம்சங்கள் உள்ளன என்றும் "அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை, ஸதகா அல்ஜாரியா, பயனளிக்கும் அறிவு" ஆகிய மூன்றும் தான் அவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்)


இங்கும்கூட அவர்கள் மார்க்க அறிவு, உலகஅறிவு என்று பிரிக்காமல் 'பயனுள்ள அறிவு’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித சமூகத்தின் ஈருலக விமோசனத்துக்குத் தேவையானது என கருதப்படும் எந்தவொரு அறிவும் பயனுள்ளதாகவே அமையும். அது மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ உலக விவகாரங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருந்தாலும் சரியே. அந்த அனைத்து கல்வி ஞானங்களிலும் ஈடுபடுவதும் கற்பதும் கற்பிப்பதும் தவிர்க்க முடியாத 'பர்ளு கிபாயா'வாக அமையும். குர்ஆன், சுன்னா, பிக்ஹ், அகீதா, ஸீரா போன்ற மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் மிக்க உலமாக்களை உருவாக்குவது போலவே, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள் போன்ற உலக விவகாரங்களோடு தொடர்பான அறிவுகளில் ஆழமான அறிவு கொண்டவர்களை உருவாக்குவதும் 'பர்ளு கிபாயா'வாகவே கருதப்படும்.

முஹிப்புல் ஹக்