குணப்படுத்தக் கூடியதா மூலவியாதி?



உலகில் பெரும்பாலான மக்கள் முகம் கொடுக்கும் நோய்களில் மூல வியாதியும் ஒன்றாகும். இந்நோய் ஏற்படப் பல காரணிகள் துணைபுரிகின்றன. குறிப்பாக அதிக உரைப்பு உணவு வகைகள் உட்கொள்ளுதல், நேரம் தவறி உண்ணுதல், தூக்கமின்மை, நார்சத்து உள்ள உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளாமை, நீண்ட நேரம் உட்காந்திருத்தல், கருத்தரித்தல், உடல் பருமன், அதிகமான வெப்பம் ஏற்படக்கூடிய இடங்களில் வேலை செய்தல், தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளாமல் இருத்தல் என்பவற்றின் விளைவாக மலச்சிக்கல் ஏற்படும். இது இந்த மூல நோய்க்கு வழிவகுக்கும். அத்தோடு குடும்பத்தில் எவருக்காவது இந்த உபாதை காணப்படுமாயின் அது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இன்றைய காலகட்டத்தில் துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அடிக்கடி உட்கொள்ளுவதால் பெரும்பாலான மக்கள் முகம் கொடுக்கும் ஆரோக்கியப் பாதிப்பாக இந்த உபாதை விளங்குகின்றது. ஆனாலும் இந்நோயை ஒன்றில் தவிர்த்துக்கொள்ளவோ அல்லது முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவோ முடியும். அதற்கான வழிமுறைகளும் சிகிச்சை முறைகளும் உள்ளன.

அதனால் நோய் தொடர்பான விழிப்புணர்வு இன்றியமையாததாகும்.

அந்த வகையில் மூல வியாதியானது ஆசன வாயில் குருதிநாளம் வீங்கி கட்டி உருவாகுவதாகும். இதன் விளைவாக ஆசன வாயில் வலி மற்றும் குருதிக்கசிவு ஏற்படும். அத்தோடு மலம் கழிக்கும் போது மூலம் வெளியே வரும். இது உண்டாவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் அதிக உரைப்பு மிக்க உணவு வகைகளை உண்ணுதலும், நீண்ட தூரம் பயணம் செய்தலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் தொடரான அமர்ந்திருத்தலும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் ஆசன வாயில் பின்பகுதியில் வெடிப்பு ஏற்படும். ஆசனவாய் பக்கத்தில் கட்டிபோன்று ஏற்பட்டு குருதியும் சீழும் வெளியேறும், ஆசனவாய் மேல்புறம் முதுகுதண்டு முடியும் இடத்தில் ஒரு சிறு கட்டிபோல் உருவாகி குருதியும் சீழும் அடிக்கடி வெளிப்படும். இவ்வாறான பாதிப்புக்களின் விளைவாக மலம் கழிக்கும்போது எரிச்சல், வலி, குருதிக்கசிவு என்பன ஏற்படும்.

அதிலும் ஆசனவாய் மேல்புறம் முதுகுதண்டு முடியும் இடத்தில் ஒரு சிறு கட்டிபோல் உருவாகி குருதியும் சீழும் அடிக்கடி வெளிப்படும். இது உடைந்து புண்ணாவதே பைலோனிடல் சைனஸ் (Pilonidal sinus) எனப்படுகின்றது. இப்புண் பின்னர் குணமடைந்துவிடும்.



இவ்வாறு பலவாறு மூல வியாதி வெளிப்படலாம். இந்நோய்க்கு உரிய நேரகாலத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிட்டால் மலச்சிக்கல், குருதிப்பெருக்கு அடிக்கடி ஏற்படும். இது உடலில் குருதி குறைவடைய வழிவகுக்கும். அதன் விளைவாக உடல் சோர்வு, மூச்சு வாங்குதல், இதய கோளாறுகள் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதன் காரணத்தினால் உரைப்பு மிக்க உணவு வகைகள், மசாலா உணவு வகைகள், எண்ணெயில் வறுத்த பொரித்த பொருட்கள். மீன், இறால், நண்டு மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகள். இறைச்சி வகைகள், பரோட்டா, உணவு விடுதிகள் மற்றும் விழாக்களில் உணவு உட்கொள்ளுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம், கத்தரிக்காய், முருங்கைக் கீரை, கருவாடு போன்ற உணவு வகைகள், (Iron) அயன் மற்றும் (Calcium) கல்சியம் மாத்திரைகள் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அது இந்த உபாதைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

ஆனால் நார்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளான வெண்டிக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், கரட், சுரக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், அவரை, புடலங்காய், பாகற்காய் உட்பட அப்பிள், தோடம், திராட்சை, மாதுளை, பலாப்பழம், கொய்யாபழம், பப்பாளி ஆகியவற்றை அன்றாட உஎணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு சிறுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, முலைக்கீரை, அக்கத்திக்கீரை, பொன்னாங் கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத் தக்காளிக்கீரை, புளிச் சக்கீரை ஆகியனவும் இந்த உபாதையைத் தவிர்க்க பெரிதும் உதவும்.

அத்தோடு தேவையான அளவு தண்ணீர் (நாள் ஒன்றுக்கு 3--4லிற்றர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்), தயிர், மோர் வகைகள், வேளா வேளைக்கு தவறாமல் உண்ணவும், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் தவறக்கூடாது.

இவ்வாறான ஏற்பாடுகளின் இவ்வகையான நோய்கள் இன்றி ஆராக்கியமாக வாழலாம். ஆனாலும் இந்நோய்க்கு உள்ளானவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுகொள்ளத் தவறக்கூடாது.

0 Comments:

Post a Comment