UNP ஒன்றிணைந்து செயற்பட்டால் 113 ஆசனங்களை பெறும் - கட்சியில் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க மாட்டேன்
| December 16, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113க்கும் மேற்பட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்ளலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிலும் மாற்றங்களை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக இன்று -16- கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி நாட்டில் நடுத்தர மக்களையும், மகாசங்கரத்தினரையும் மறந்துவிட்டதாகவும் அதன் காரணமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களுக்கு சென்று நாட்டில் நடுத்தர மக்களை சந்தித்து தெளிவு படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற முடியும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
அவ்வாறு செய்வதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் தங்கியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பது அப்போதே தெரியும் என குறிப்பிட்ட அவர் அத்தருணத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை சரிசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை மாற்றமடைந்திருக்கும் எனவும் கூறினார்.
தாம் இந்த கட்சியின் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியை புதிய முகங்கள் பொறுப்பேற்க முன்வரவேண்டும் எனவும் அந்த சந்தர்ப்பத்தை தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.