அமெரிக்க பதில் தாக்குதல் நடாத்தினால் மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்
| January 08, 2020
ஈரான் தற்காப்புக்காக ஈராக்கிலுள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீது நடாத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மேலும் 100 அமெரிக்க இலக்குகள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொலைக்குப் பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் இராணுவ படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்து ஈரான் அரச தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஈரான் இன்று நடாத்திய ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவப் படைத் தளத்தில் சுமார் 1,500 அமெரிக்க இராணுவ படை வீரர்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈராக்கில் இருந்த அமெரிக்க இலக்குகள் மீது ஈரானால் ஏவப்பட்ட எந்தவொரு ஏவுகணைகளும் அமெரிக்க படைகளினால் தடுக்கப்படவில்லை எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் எனவும் ஈரான் தொலைக்காட்சி சேவையொன்று அங்குள்ள இராணுவ தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.