மார்ச் 17,18,19ஆம் திகதிகளில் வேட்புமனு ஏற்றது செல்லுபடியாகுமா?சட்டச் சிக்கல் இருப்பதாக கட்சிகள் சுட்டிக்காட்டு

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் இந்தச் சட்டச் சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தின்போது இவ்விவகாரம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அரசியலமைப்பு ரீதியில் தேர்தல் விதிகள் முரண்பாடு காணப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டமை சட்டரீதியானதா? என்ற சட்டச்சிக்கல் நேற்றைய கூட்டத்தின் போது சில கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இந்தத் தவறு குறித்து தான் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், இங்கு கருத்து தெரிவித்த போது, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல் இதுநாள் வரை பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து முரண்பாடுகளும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்போதைய நிலையில் சட்ட சிக்கல்களேடு காலமும் கடந்து கொண்டு போவதால் அவசர மாற்று வழியொன்று காணப்பட வேண்டியதன் அவசியத்தை சிறிய கட்சிகள் பலவும் இங்கு சுட்டிக் காட்டியுள்ளன. இவ்விடயங்கள் குறித்து சட்ட மாஅதிபருடனும் சட்ட வல்லுனர்களுடனும் கலந்துரையாடி மேற்கொண்டு நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படமென ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த 35,40 நாட்களுக்கிடையில் தேர்தலை நடத்துவது சாத்தியப்படுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆணைக்குழு தலைவர் தேசப்பிரிய, தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் தேர்தல் காலம் தாமதிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய மக்களின் ஜனநாயக வாக்குரிமை பலவீனப்படுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதாரத்துறையினரும் பாதுகாப்புத்தரப்பும் கொரோனா 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த சில தினங்களில் வெற்றி கண்டால், குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்த முடியும். அது சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியானதாகும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க்க கூடிய இயல்பு நிலை ஏற்படும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரமும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம்? என தீர்மானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியமான பல கட்சிகளில் எதிர்தரப்பை சேர்ந்த முக்கியமான கட்சிகள் பலவும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த வேண்டாமெனவும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் வரையில் தேர்தலை பிற் போடுவது வரவேற்கத்தக்கதென சுட்டிக் காட்டியுள்ளனர்.


இந்த நிலையில் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்குவதை தாமதப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார். இந்த இலக்கங்களை நாளை திங்கட்கிழமை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சந்திப்பில் ஆளும் பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய கட்சி, ஐக்கிய சமாதான முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான கட்சிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:

Post a Comment