வெலிகம பாரி அரபுக்கல்லூரிக்கு விஜயம் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன் வெலிகம பிரதேச உலமாக்கள் சந்திப்பில் அமைச்சர் டலஸ்


 
கல்வி அமைச்சராக நான் சத்தியபிரமாணம் செய்த பின், முதன் முதலாக கல்வி கற்ற எனது பாடசாலைக்குக்கூட விஜயம் செய்யாமல் முன்னாள் நகர சபையின் தலைவர் எச்.எச்.முஹம்மதின் அழைப்பை ஏற்று பாரி அரபுக் கல்லூரிக்கு முதல் விஜயம் மேற்கொண்டேன். அங்கு மரியாதைக்குரிய உலமாக்களை சந்தித்ததை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன் என மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

வெலிகம, புஹாரி மஸ்ஜித் மாவத்தையில் வெலிகம வாழ் உலமாக்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் கல்வி அமைச்சர் பதவிஏற்று முதன் முதலாக நான் பாரி அரபுக் கல்லூரிக்கே விஜயம் செய்தேன்.இதனை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இருந்தாலும் எமக்கும் உங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியொன்றுள்ளது. அது தான் மொழிப் பிரச்சினையாகும்.இந்த மொழிப் பிரச்சினைகளே எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.இது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல.

 சுதந்திரம் அடைந்ததிலிருந்து இப்பிரச்சினை இருந்து வருகின்றது. இது1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் மேலும் வலுவடைந்தது. அப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படவில்லை.உண்மையில் நான் கல்வி அமைச்சராக இருந்தும் கூட எனக்கு தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அவர்களது தாய் மொழியில் என்னோடு உரையாடும் போது அதனை புரிந்து கொள்ள முடியாது.இது எனது பலவீனமே. இதனை நிவர்த்தி செய்ய தேசிய திட்டம் ஒன்றை எமது ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச வகுத்துள்ளார். அதன் மூலம் எமதுநாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் இரு தேசிய மொழிகளையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டும். 

 கடந்த வருடம் க.பொ.த. சா.த பரீட்சைக்குத் தோற்றிய 7 இலட்சம் மாணவர்களில் சுமார் 10,000 மாணவர்கள் மாத்திரமே இரண்டாம் மொழி சிங்களத்துக்கும் மேலும் 10,000 மாணவர்கள் மாத்திரமே இரண்டாம் மொழி தமிழுக்கும் தோற்றினர். இந்நிலைமை மாற வேண்டும். நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இரு தேசியமொழிகளிலும் தேர்ச்சிபெறவேண்டும்.அதற்காகநாம் தேசிய மொழி கற்கைநிலையம் ஒன்றை உருவாக்க உள்ளோம்.இது எமது ஜனாதிபதியின் சிந்தனையில் உள்ள ஒரு செயற்பாடாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் நாம் அதனை நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் நகர சபை முன்னாள் தலைவர் எச்.எச். முஹம்மத் , ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளருமான அலிசப்ரி ஆகியோரும் உரையாற்றினர். 

வெலிகம தினகரன் நிருபர்

0 Comments:

Post a Comment