கம்பஹாவில் பௌதீக விஞ்ஞான ஆசிரியருக்கு கொரோனா- ஆசிரியர்கள் மாணவர்கள் 150 பேருக்கு பரிசோதனை


கம்பஹ பிரதேசத்தில் பௌதீக விஞ்ஞானம் கற்பித்த ஆசிரியருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிப் பழகிய 150 பேரிடம் பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கம்பஹ மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆசிரிருக்கு கொரோனா தொற்று கடந்த 19 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் கடமையாற்றிய உளவளத்துணை ஆலோசகரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி மூலம் இந்த ஆசிரிருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியர் கம்பக பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியராகக் கடமையாற்றுவதோடு, மேலதிக வகுப்புக்களையும் நடாத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 அதனால் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மேலதிக டியுசன் வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியரின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 52 பேரும் மேலதிக வகுப்புக்களில் கலந்து கொண்ட 100 மாணவர்களது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment