தோல்விக்குப் பின் மத்திய கிழக்கில் இருந்து ஆப்கானை நோக்கி நகரும் ஐ.எஸ்


ஈராக் மற்றும் சிரியாவில் கொடிய போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு உறுப்பினர்கள் தனது ஜிஹாத் போராட்டத்தை தொடரும் அமெரிக்கா மீதான பாரிய தாக்குதல் ஒன்றுக்கு உதவ ஆப்கானிஸ்தானை நோக்கி படையெடுத்து வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் சுயமாக அறிவித்துக்கொண்ட கலீபத் (இஸ்லாமிய பேரரசு) தோல்வியடைந்த பின்னர் தொற்காசியாவில் பேரழிவு தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ் தனது பிராந்திய செல்வாக்கை உறுதிப்படுத்த விரும்புகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

“அவர்களில் சிலர் ஏற்கனவே இங்கு வந்து அவர்கள் அங்கு கற்ற தமது அறிவு, திறன் மற்றும் அனுபவத்தை இங்கு பரிமாற்ற முயற்சிக்கின்றனர்” என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிரேஷ்ட உளவு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“(ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் தொடராவிட்டால் அவர்கள் எமது சொந்த நாட்டில் பெரும்பாலும் ஓர் ஆண்டுக்குள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவார்கள்” என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தமது பெயரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சதியின் தன்மை பற்றி அந்த அதிகாரி குறிப்பிடாதபோதும், 2016 ஆம் ஆண்டு பிளோரிடா துப்பாக்கிச் சூடு உட்பட ஐ.எஸ் அமெரிக்காவில் இதற்கு முன்னர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. பிளோரிடா தாக்குதலில் ஓர்லாண்ட் இரவு விடுத்திக்குள் நுழைந்த ஐ.எஸ் உடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 2,500 மற்றும் 4,000க்கு இடைப்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

எனினும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் எண்ணிக்கை மற்றும் திறன் இரண்டிலும் வளர்ச்சி பெற்றிருப்பதாக அண்மையில் அங்கு விஜயம் செய்த அமெரிக்க செனட் ஆயுத சேவைக் குழு உறுப்பினரான ஜக் ரீட் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐ.எஸ் குழுவை ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக ஒழுக்கி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அந்த ஆண்டு திட்டம் வகுத்தது. எனினும் இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்த ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ திட்டம், அந்தக் குழுவின் தீவிரத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதாக குறிப்பிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ் ஆறு உயர் மட்டத் தாக்குதல்களை நடத்தியதோடு 2017 இல் அந்த எண்ணிக்கை 18 ஆகவும் கடந்த ஆண்டு 24 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி அரச அமைச்சு ஒன்றின் மீதான தற்கொலை தாக்குதலுக்கும் ஐ.எஸ் உரிமை கோரியது.