இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய உரிமைகள்


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது.

'ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது' என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும்' என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள்' (புகாரி, அஹ்மத்)

'ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத – தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க வலி| முனைகின்ற போது அதனை மறுக்கின்ற – நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது வலி| ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும்.

0 Comments:

Post a Comment