புவியின் உயிர் வாழ்வை அழித்து விடுமா அமேசன் தீ?


பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியது. அமேசன் காடுகள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். பாடநூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வரை அமேசன் தொடர்பான ஏதோ ஒன்று, நம் கண்ணில் தவறாமல் தென்படும். பல்வேறு சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அமேசன் மழைக் காடுகள் கடந்த 3வாரங்களாகப் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன.

கோடை காலங்களில் கூட, அமேசன் மழைக்காடுகளில் அத்தனை எளிதில் தீ விபத்து ஏற்பட்டு விடாது. அங்கு நிலவி வரும் ஈரப்பதம் அதற்கு முக்கியமான காரணம். உலகின் மிகப் பெரிய காடாக அமேசன் அறியப்படுகிறது. சுமார் 5.5மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40சதவீத பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது.

மேலும் இந்த மழைக்காடுகள் சுமார் 9நாடுகளில் பரந்து விரிந்து இயற்கையான பசுமைப் போர்வையாக விரிந்திருக்கின்றன. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா ஆகிய நாடுகளில் அமேசன் காடு படர்ந்து காணப்படுகிறது. 60சதவீத அமேசான் காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசிலில்தான் தற்போது காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது.

அமேசன் மழைக்காடுகளை பல்லுயிர் சரணாலயம் என்றும் அழைக்கிறார்கள். பூமியில் இருக்கும் இனங்களில் 4-இல் ஒரு பங்கை தன்னுள் கொண்டுள்ளது இந்த அமேசன். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசன் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000வகையான செடிகள், 2,500வகையான மீன்கள், 1,500பறவைகள், 500பாலூட்டிகள், 550ஊர்வன மற்றும் 2.5மில்லியன் பூச்சிகள் இருப்பதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. கடந்த 20ஆண்டுகளில் மட்டும் 2,200புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன.

பலரும் அறிந்த அமேசானின் மற்றொரு பெயர் `பூமியின் நுரையீரல்’. உலகின் மொத்த ஒக்சிஜன் உற்பத்தில் சுமார் 20சதவீதத்துக்கும் மேலாக அமேசானில் இருந்து கிடைக்கிறது. மேலும் அதிக அளவில் காபனீரொட்சைட்டை உள்வாங்கிக் கொள்கிறது. அமேசன் ஆறு உலகின் மிக நீளமான ஆறு. இது சுமார் 6,900கிலோமீற்றர் ஓடுகிறது. இந்த அமேசன் நதி மற்றும் அதன் கிளை நதிகள் உலகின் மொத்த நன்னீரில் 20சதவீத நீரைத் தருவதாகப் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அடர்ந்த மழைக்காடுகளில் சுமார் 420பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திய பழங்குடியினரும் அடக்கம். அமேசானில் இருக்கும் இந்திய பழங்குடியினர் சுமார் 86மொழிகளை பேசுவதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. அமேசனில் இருகும் பெரிய பழங்குடியின இனமாக `டிகுனா’ இனம் அறியப்படுகிறது. சுமார் 40,000மக்கள் கொண்ட இந்தப் பழங்குடியினர் பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இத்தனை பெரிய அமேசான் மழைக்காடு தற்போது மரங்கள் வெட்டப்படுவதாலும் பெரும் காட்டுத் தீ சம்பவங்களாலும் பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. உலகில் இத்தனை உயிர்களை வாழவைக்கும் அமேசன், கடந்த 50ஆண்டுகளில் சுமார் 20சதவீதம் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு காரணம் பெரும்பாலான காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதுதான்.

தற்போதைய பிரேசிலின் பிரதமர் ஜெயர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்கள் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலையில் மட்டும் பன்மடங்கு அதிகமாகக் காடு அழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தரும் தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254சதுர கிலோமீற்றர் காடு அழிப்பு அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 278சதவீதம் அதிகம்.

மேலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி, பிரேசிலில் இந்த ஆண்டு தற்போது வரை 73,000காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை அமேசனில்தான் பதிவாகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 39,759ஆக உள்ளது. எத்தனை வேகமாக அமேசான் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்கள், ஒன்று வளர்ச்சி, மற்றொன்று பெரு விவசாயிகள்.

பிரேசில் அரசு தொடர்ச்சியாக வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருவதுடன் பிரேசில் அரசுக்கு வழங்கிய நிதி உதவிகளையும் நிறுத்தப் போவதாக ஜெர்மனி,​ேநார்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

`அமேசன் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்சினை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்சினை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசன் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டு வரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா என்பது சந்தேகம்.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்து கொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்து விட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப் பெரியது. இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ. இப்போது இந்த நெருப்பு அணைக்கப்பட்டு விட்டாலும் கூட இவரது அரசியல் கொள்கைகள் நிச்சயம் அமேசன் காடுகளை ஒருவழி செய்துவிடும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

2018ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திலிருந்தே, அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேசில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேசிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்த்தல் நிலங்களாக அமேசன் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது.

இது இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும்விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதிசெய்கிறது. இந்தக் காட்டுத்தீ பாதிப்புகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 84%அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது.

இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணிநீக்கம் செய்தது பிரேசில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேசிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனேரோ.

முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசான் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என கைவிரித்தார் பொல்சொனேரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட தொண்டர் நிறுவனங்களின் வேலைதான் இது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் பெரும்பாலும் பொல்சொனேரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது.

0 Comments:

Post a Comment