முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு! எம்.வீ. பாத்திமா ஹப்ஸா சலாஹிய்யா சர்வதேச பாடசாலை, வெலிகம.


ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்' என நபிகளார் தெரிவுத்துள்ளார். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை 'ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு' என்ற வரிகளின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இதனால் வாராந்தம் நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயலவேண்டும்.

 ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபிகளார் (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:





'ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்'. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள் அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செ;யது, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும். ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

0 Comments:

Post a Comment