மாணவர்களை தண்டிப்பதில் ஆசிரியர்களின் வகிபாகம்

தவறு தப்பு தண்டனை போன்ற சொற்கள் பல சந்தர்ப்பங்களில் தவறாகவே கையாளப்படுகின்றது.  உண்மையில் இவற்றை நேர்மறையாக சிந்திக்கவும் செயல்படவும்  தவறிவிடுகிறோம்.

ஆசிரியர் பணி என்பது நுபுவத்தின் அந்தஸ்தை பிரதிபலிக்கின்றது. ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் தூண்கள். அவர்களை நம்பித்தான் மாணவர்கள் என்ற கட்டிடம் எழுப்பப்படுகின்றது. மாணவர்களை சரியாக நெறிப்படுத்தி பலப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனப்படுத்துகின்றார்கள், முடமாக்கின்றார்கள்.
 பல சந்தர்ப்பங்களில், மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கத்தில் ஆசிரியர்கள் செயற்பட்டாலும் அவர்களது அணுகுமுறைகளும்  வெளிப்பாடுகளும் நடத்தைகளும் மிகப் பிழையாக, பொருத்தமற்றதாக அமைவதனை  அவதானிக்கலாம்.

 மாணவர்கள் தவறு செய்வது, பிழை விடுவது  இயல்பானது, இயற்கையானது. அதுதான் கற்றலில் மிக ஆழமானதாகவும் அனுபவக் கற்றலாகவும் அமைந்துவிடுகின்றது. இதை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 ஆசிரியர்களே! ஆசிரியரான உங்களைப் போன்ற அறிவோ பக்குவமோ மாணவ சமூகத்திடம் கிடையாது. அதனால்தான் அவர்களை மாணவர்கள் என்று அழைக்கின்றோம்.

மாணவர்கள் தவறு செய்யும்போதும் பிழை விடும்போதும் கோபப்படுத்த கூடிய செயல்களை செய்யும் போதும் அவர்களை எவ்வாறு அணுகலாம், எவ்வாறான அணுகுமுறைகள் வெற்றியளிக்கும் என்பது தொடர்பாக இவ்வாக்கம் பேச முனைகிறது.

*1.மாணவர்களை புரிந்து கொள்ளுங்கள்*

 ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன். ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்துவமான ஆளுமை பண்புகள் இருக்கின்றது. ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தனித்துவமானவர்களோ  அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வளருகின்ற சூழல், அறிவுத் தரம், மனப்பாங்கு அனைத்தும் வித்தியாசப்பட்டிருக்கும். பாடசாலையை எடுத்துக்கொண்டால், ஆசிரியர் பாடத்திட்டத்துடன், கற்றலுடன் தனது செயற்பாட்டை சுருக்கி விடாமல் அந்த மாணவன், அவனுடைய  குடும்பப் பின்னணி குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அவருடைய தந்தை யார்? தாய் யார்? அவர்களின் கல்வித் தரம் என்ன? அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு எவ்வாறு இருக்கின்றது? குறித்த மாணவன் எவ்வாறு வளர்க்கப்படுகின்றான்? போன்ற வினாக்களுக்கு ஆசிரியர்கள் விடை தெரிந்திருக்க வேண்டும்.

 அதேபோன்று அந்த குடும்பத்தின் பொருளாதார பின்னணி குறித்தும் அறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் வறுமையில் வாடுகின்ற ஒரு மாணவனிடத்தில்  களவு இருப்பது இயற்கையானது. அவனுடைய வறுமை அவனுடைய ஆசைகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு தடையாக அமைகின்றது. ஆகவே அவருடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கான சந்தர்ப்பமாக அவன் களவெடுத்தலை நோக்குகின்றான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூட வறுமையிலிருந்தும் குஃப்ரிலிருந்தும் பாதுகாப்புத் தேடினார்கள். ஏனெனில் வருமை குஃப்ரிக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதனால்...

  குறித்த மாணவனின் அறிவுக்கூர்மை, மனப்பான்மை,  சகபாடிகள்  குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு தனது வகுப்பில் கற்கின்ற மாணவனின் தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார விடயங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிந்திருப்பது அந்த மாணவர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுக்கான சரியான காரணத்தை கண்டறியவும் காரணங்கள் மீண்டும் இடம் பெறாத வண்ணம் மீட்டெடுக்கவும் அந்த மாணவர்களை நல்வழிப் படுத்தவும் முடியுமாக இருக்கும்.

*2.அன்பு செலுத்துங்கள்*

 உலகை ஆளுவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அன்பு ஒன்றுதான். யாரெல்லாம் இந்த அன்பை ஆயுதமாக கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு முன்னால் அடிபணியாத எந்த சக்தியும் இருக்க முடியாது. மிகப்பெரிய வல்லரசுகளை எல்லாம் அன்பு என்ற ஆயுதம் வீழ்த்தி இருக்கின்றது.

 வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு புனிதமானது. அந்த அன்பு அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் பரிமாறப்பட வேண்டும். ஆசிரியர்கள் உள்ளத்தால் மாணவர்களை நேசிக்கவேண்டும். ஒவ்வொருவரையும் தன் சொந்த பிள்ளைகளாக பார்க்க வேண்டும். தான் மாணவர்களின் மீது உண்மையிலும் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணரச் செய்யவேண்டும்.  அவர்களை அழைத்து எதைக் கூறினாலும் அவர்களிடம் மறக்காமல்  *நான் உன்னை விரும்புகிறேன், உன் மீது கொண்ட அன்பின் காரணமாகவே இதை சொல்கிறேன்.*  என சொல்ல வேண்டும். அடிக்கடி, நாம் அவர்கள் மீது அன்பு வைத்து இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்கள் எமக்கு கீழ்படிந்து நடக்கின்ற தன்மை அதிகரிக்கும். நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் இந்த அன்பு ஒன்றுதான்.

*அன்பால் மாணவர்களை அடிமைப்படுத்துங்கள்; நாளைய உலகை அவர்கள் பண்பால் அலங்கரிப்பார்கள்.*

*3.தவறை சரியான வழிமுறையில் உணர்த்துங்கள்*

 மாணவர்கள் தவறு செய்வது இயல்பானதுதான். அந்த தவறை அவர்கள் அறியாது செய்யலாம், ஏன் சிலவேளை அறிந்தும் செய்யலாம் அதன் பாரதூரங்களை விளங்காதவரை. தவறுகளுக்காக நாங்கள் அவர்களை கண்டிக்கும் போது அவர்கள் செய்தது தவறுதான் என்பதை உணர்த்துவது பிரதானமானது. அவ்வாறு அவர்கள் உணரும் பட்சத்தில் அதுதான் அதற்கான  பரிகாரமாக அமைகின்றது.

ஆகவே தவறுகளை மிகச்சரியாக தவறுகள் என உணர்த்துங்கள். "அவைகள் எமக்கு பொருத்தமில்லை, எம்மை அசிங்கப்படுத்த கூடியவை" என்பதை மாணவர்கள் மிகத் தெளிவாக விளங்கும் வகையில் விளக்குவது ஆசிரியர்களின் கடமை.

*4.கவலை படுங்கள்: கோபப்படாதீர்கள்.*

 மாணவர்கள் தவறு செய்யும் போது பிழை விடும் போது கோபம் வருவது இயல்பானதுதான். ஆனாலும் பக்குவப்பட்ட ஆசிரியர்கள் அந்த இயல்புக்கு, அந்த உணர்வுக்கு இடம் வழங்க மாட்டார்கள்; அறிவுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறு உங்களை கவலை கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் செயலால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், வேதனைப்படுகிறீர்கள் என்பதனை அவர்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அவர்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள். *அவனுடைய வயது அவனது தவறை உணரச் செய்யாத சந்தர்ப்பங்களிலும் அவர்களின் மீது நீங்கள் கொண்ட அன்பும், அதன் காரணமாக உங்களிடம் வெளிப்படும் கவலையும் அவர்களின் மனங்களிலும் நடத்தையிலும் நல்ல மாறுதல்களை கொண்டுவரும்* அதற்கு மாற்றமாக அவர்களுடன் நீங்கள் கோபப்பட்டால் உங்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் வருவது இயல்பானது. இந்நிலையிலிருந்து ஆசிரியர் சமூகம் மீள வேண்டும்.  உங்களது கோபம் மாணவர்களை தண்டிக்கலாம், மாணவர்களை பயமுறுத்தலாம். ஆனால், தவறிலிருந்து அவர்களை பாதுகாக்காது. இரகசியமாக அந்த தவறுகளை மீண்டும் மீண்டும்  செய்யத்தூண்டும். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் கோபம் சைத்தானுக்கு உரியது என வர்ணித்தார்கள்.

 *5.மனம் விட்டு கதைக்கட்டும்.*

  நாம் மாணவர்களாக வாழ்ந்த சூழல் அல்ல இன்று இருப்பது. இன்றைய சூழலில் 95 வீதமானவைகள் மாணவர்களை நெறிதவற  செய்யக் கூடிய காரணிகளாகவே  அமைந்துள்ளது. இன்டர்நெட் பாவனை சமூக வலைதளங்கள் மேற்கத்திய கலாச்சார தாக்கம் என அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆகவே இத்தகைய மிகப்பெரிய சவால் மிக்க சூழலில் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்துவது என்பது ........

இத்தகைய சூழலில் மாணவர்கள் பார்ப்பவை கேட்பவை சகபாடிகளுடனான தொடர்பு என்பவற்றின் ஊடாக அதிகம் கற்கின்றார்கள். சரியாக வழிப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

மாணவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். நடைமுறை வாழ்வில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வாய் திறந்து கதைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை வழிநடத்துவது வெற்றி பெரும்.

  *மாணவர்கள் மனம் திறந்து ஆசிரியர்களுடன் கதைப்பது என்பது சாதாரணமாக நடந்து விட முடியாது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மீது நம்பிக்கை வரவேண்டும். இந்த ஆசிரியரை நம்பலாம், என்னுடைய விடயங்களை இவருடன் பரிமாறலாம், ரகசியங்களை அவர் பாதுகாப்பார், ஒரு பொழுதும் நான் கூறுகின்ற விடயங்களால் என்னை இழிவாக பார்க்கமாட்டார், யார் முன்னிலையிலும் இழிவு படுத்தவும் மாட்டார், என்னை  ஒதுக்கவும் மாட்டார், முறையாக எனக்கான வழிகாட்டல்களை தந்து அரவணைப்பார் என்று மாணவர்கள் உணரும்போதுதான் ஆசிரியர்களை தனது கௌரவ நண்பர்களாக எற்பார்கள்.*

ஆகவே உங்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்வில் சகல விடயங்களிலும் அவர்களை வழிநடத்தும் இடத்திற்கு நீங்கள் வரவேண்டும்.

 *6.அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்.*

உங்களது மாணவன் ஒருவர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் விரும்பத்தகாத வார்த்தைகளை உபயோகிக்கிறான் என்றால் மனதால் கவலைப்படுங்கள்.  இரண்டு ரக்அத் தொழுது விட்டு இரு கரம் ஏந்தி அவனுக்காக துவா செய்யுங்கள். அவன் செய்த தவறுக்கு நீங்கள் இஸ்திஹ்பார் செய்யுங்கள். இது பண்பட்ட ஆசிரியர்களின் அடையாளம். இதற்கான முன் மாதிரியை எங்கள் ஆசிரியர், இறுதித்தூதரிடம் அதிகமதிகமாய் கண்டுகொள்ளலாம்.

 ஆசிரியர்களே! உள்ளங்களுக்கு செந்தக்காரன் அல்லாஹ் என்பதை மறந்துவிடாதீர்கள்.

*7. துறை சார்ந்தவர்களை அணுகுங்கள்.*

  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மத்தியில் இன்றைய காலகட்டத்தில் பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள். அதனை எவ்வாறு அணுகுவது, கையாள்வது என்பதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து  செயல்படாமல் இத்துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவது இன்றியமையாதது. இல்லாதபட்சத்தில் அவ்வாசிரியர் விரக்திக்கும் ஒரு வகையான வெறுப்பு மனநிலைக்கும் ஆட்படுவது  தவிர்க்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள பாடசாலை அதிபர்களிடமெல்லாம் பணிவாய் வேண்டுவது ஒன்றைத்தான்
" உங்கள் பாடசாலையில் மாணவர் சார்ந்த பிரச்சினைகளை, ஒழுங்குகளை, தண்டனைகளை  அணுகுவதில் தண்டிப்பதில் எல்லா ஆசிரியர்களையும் ஈடுபடுத்த முனையாதீர்கள். இத்துறையில் நிதானித்து அனுபவம் மிக்க தொழில்வாண்மை பயிற்சிபெற்ற துறை சார்ந்தவர்களை கொண்டே இவற்றை  நடைமுறைப்படுத்துங்கள், அணுகுங்கள்.

சில ஆசிரியர்கள் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனமாக்கி, மூடமாக்கியுள்ளனர்.

 வளமான மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால்  ஆசிரியர் சமூகத்தை நெறிப்படுத்தி வழிகாட்டுதல்களை வழங்குவதிலும்  பாடசாலை அதிபர்கள் முன் நிற்க வேண்டும்.

இறுதியாய் ஒன்று சொல்கிறேன்; மறந்துவிடாதீர்கள்.

*உலகிற்கு  விளக்கேற்றிய தோமஸ் அல்வா எடிசன் என்ற மாணவனை முடமாக்கி பாடசாலையை விட்டு வெளியேற்றிய ஆசிரியர் இன்னும், இன்றும் பாடசாலையில் தான் இருக்கிறார்...*

*அவனை உலகம் போற்றும் மாணவனாக மாற்றி சாதனை படைத்த  அவன் தாயும் ஆசிரியராக நியமனம் பெறுகிறார்...*

 *நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எடிசன்கள் பாடசாலைகளில்...*

 நீங்கள் யார்?
 எடிசனின் ஆசிரியரா? சாதனை படைக்கப் போகும் எடிசனின் தாயா? 

 உங்கள் மாணவனை கேளுங்கள் நீங்கள் யாரென்று...

 *மிகச்சிறந்த  அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளமான மாணவர் சமூகம் தழைத்தோங்கும்*

 மிகச்சிறந்த ஆசிரியரையும் வளமான மாணவனையும் நீங்கள் காண நினைத்தால் இவ்வாகத்தை  பகிரலாமே...

அஷ்ஷேக் ஸஹீம் கமால் (இர்பானி)BA,
Dip in counseling (NISD)
 சிரேஷ்ட உளவளத்துணையாளர்
மேசி கல்வி வளாகம்